தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக் குழு கூட்டத்தில், ரூ.40 கோடி கடன் வாங்கப்படும் என, நடிகர் விஷாலின் கருத்துக்கு, நடிகர் செந்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர்களிடம் போய் கேளுங்கள் எனக் கொந்தளித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது பொதுக்குழுக் கூட்டம், அதன் தலைவர் நாசர் தலைமையிலும், பொதுச் செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி முன்னிலையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் விஷால், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது, நடிகர் சங்க கட்டிடம் விரைவில் கட்டி முடிக்கப்படும். நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இதற்காக, ரூ.40 கோடி கடன் வாங்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் எனத் தெரிவித்தார்.
ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த நேற்றைய நிகழ்ச்சியில், பிரபல நடிகர்களான கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும், நடிகைகளில் முன்னணி கதாநாயகியாக வரும் நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில், நேற்று கூட்டத்திற்கு வந்த நடிகர்கள் சிலர் நடிகர் சங்கத்தின் மீதான அதிருப்பதியை வெளிப்படையாகவே தெரிவித்தனர். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று இருந்த நிலையில், நகைச்சுவை நடிகர் செந்தில், தனது கண்டனத்தை முதன் முதலில் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நடிகர் செந்தில், தமிழ் நடிகர்கள் பலர் கோடிகோடியாக சம்பாதிக்கிறார்கள். அவர்களிடம் போய் கேட்காமல், மிக குறைந்த அளவில் சொற்ப சம்பளம் வாங்குபவர்களிடம் பணம் கேட்கிறார்கள். இது என்ன நியாயம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, நடிகர் செந்திலின் பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.