அமித் மேத்தா அமெரிக்காவின் கொலம்பியா மாவட்டத்தில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய முதல் இந்திய அமெரிக்கர் ஆவார்.
1971-ஆம் ஆண்டு குஜராத்தின் பாட்னாவில் அமித் மேத்தா பிறந்தார். பின்னர், ஒரு வயதான மேத்தாவுடன் பெற்றோர் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தனர். இவரது தந்தை பொறியாளராகவும், தாயார் ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநராகவும் பணியாற்றினர்.
மேத்தா 1993-ஆம் ஆண்டு ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், 1997-இல் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார்.
1997-1998 வரை லாதம் & வாட்கின்ஸ் சட்ட நிறுவனத்தில் பணியாற்றினார். தொடர்ந்து பல்வேறு சட்டப் பணிகள் தொடர்பாக வேலை செய்த இவர், 2014-ஆம் ஆண்டு கொலம்பியா மாவட்ட நீதிபதியாக அமெரிக்காவின் அப்போதைய அதிபர் பராக் ஒபாமா பரிந்துரை செய்தார். செனட் சபையின் ஒப்புதலுக்குப் பின், கொலம்பியா மாவட்ட நீதிபதியாக பணியில் அமர்ந்தார்.
பின்னர், 2021-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வெளிநாட்டு புலனாய்வு கண்காணிப்பு நீதிமன்றத்தில் நீதிபதியானார். 2021-ஆம் ஆண்டு அமெரிக்காவின் கேபிடல் தாக்குதல் தொடர்பான பல வழக்குகளில் மேத்தா தலைமை தாங்கினார். அமெரிக்க முன்னாள் அதிபர் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட முக்கியமான வழக்குகளில் விசாரணை நடத்தியுள்ளார்.
நீதிபதி மேத்தா ஹிப்-ஹாப் இசையின் மீது ஆர்வம் கொண்டவர்.
இவர், அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் பதவியேற்ற முதல் ஆசிய-பசிபிக் அமெரிக்கர் என்ற வரலாற்றைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.