பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை நாங்களும் கையாள விரும்புகிறோம் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்திருக்கிறார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் 2014-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது “மேக் இன் இந்தியா” திட்டம். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், இந்தியாவிலேயே அனைத்துப் பொருட்களையும் தயாரிப்பதோடு, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து, வெளிநாட்டு இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதுதான். இதற்காக, இந்திய தொழில் துறையில் முதலீடுகளை அதிகரிப்பது, புதுமைகளை வளர்ப்பது, திறனை மேம்படுத்துவது, அறிவுசார் உடைமைகளை பாதுகாப்பது மற்றும் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது ஆகியவையே பிரதான குறிக்கோள். பிரதமர் மோடியின் இத்திட்டம் இந்தியாவில் நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில், ரஷ்யாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டாக்கில் கிழக்குப் பொருளாதார மன்றத்தின் 8-வது அமர்வில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “ஒரு காலத்தில் நாங்கள் வெளிநாடுகளிலிருந்து மட்டுமே கார்களை இறக்குமதி செய்தோம். பின்னர், நாங்களே உள்நாட்டில் கார்களை உற்பத்தி செய்யத் தொடங்கினோம். நாங்கள் 90-களில் இறக்குமதி செய்து குவித்து வந்த அயல்நாட்டு மெர்சிடிஸ் மற்றும் ஆடி கார்களைப் போல், இவை மிக பிரம்மாண்டமானவை அல்ல. ஆனால், இது ஒரு பிரச்சினை அல்ல. எங்கள் கூட்டாளிகளின் வழிமுறைகளை நாங்களும் கடைப்பிடிக்க வேண்டும்.
உதாரணமாக, இந்தியாவின் “மேக் இன் இந்தியா” திட்டம் போன்றவற்றை நாங்களும் கையாள விரும்புகிறோம். உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்துவதன் மூலம், அந்தந்த நகரங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும். இத்தகைய பொருளாதார வளர்ச்சி வெற்றிக்கான வழிமுறைகளை இந்தியாவைப் போல ரஷ்யாவும் கையாள வேண்டும். இந்தியர்கள் இந்தியாவிலேயே அதிகளவில் வாகனங்களை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். இது மிகச் சரியான வழிமுறை. மோடி மிகச் சரியானதைத்தான் செய்கிறார்” என்று கூறியிருக்கிறார்.