மத்தியப் பிரதேச மாநிலத்தில் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “எதிர்கட்சிகள் சனாதனத்தை இன்று வெளிப்படையாகவே அழிக்க நினைக்கிறார்கள். நாளை நம் மீதும் தாக்குதல் நடத்துவார்கள். ஆகவே, அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலத்துக்குச் சென்றிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நர்மதாபுரம் மாவட்டத்தில் ‘மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மண்டலம்’, இந்தூரில் 2 தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், ரத்லமில் ஒரு மெகா தொழில் பூங்கா மற்றும் மாநிலம் முழுவதும் 6 புதிய தொழில்துறை பகுதிகள் என 50,700 கோடி ரூபாய் மதிப்பிலான 10 திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். பின்னர், கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இந்த நிகழ்ச்சியின் மூலம் மாநில மக்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பை வழங்கிய, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானுக்கும், மாநில அரசுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று 50,000 கோடி ரூபாய்க்கு மேலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறோம். பல மாநிலங்களின் பட்ஜெட்டை விட இந்த திட்டங்களின் கூட்டுச் செலவு அதிகம். ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு உறுதுணையாக இருந்த நாட்டு மக்களுக்கு நன்றி. இந்த மாநிலத்தை பல தசாப்தங்களாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, வறண்டதாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலமாகவும் வைத்திருந்தது. மாநிலத்தின் பந்தல்கண்ட் பகுதியை தண்ணீர், மின்சாரம், சாலைகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைக்கூட நிவர்த்தி செய்யாமல் விட்டுச் சென்றதை முந்தைய தலைமுறை மக்கள் மறந்திருக்கு மாட்டார்கள்.
ஆனால், இன்று பா.ஜ.க. ஆட்சியில் ஒவ்வொரு கிராமத்திலும் புதிய சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மத்தியப் பிரதேசம் தொழில்மயமாக்கலுக்கு வரும்போது புதிய உயரங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன். நர்மதாபுரத்தில் உருவாக்கப்படும், மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மண்டலம், இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முக்கிய படியாக இருக்கும். அதேபோல, இந்தூரில் கட்டப்படும் தொழில்நுட்பப் பூங்கா 3 மற்றும் 4, மாநிலத்தின் ஐ.டி. மற்றும் ஐ.டி.இ.எஸ். துறைகளுக்கு உத்வேகத்தை அளிக்கும். மேலும், இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
எதிர்கட்சிகளின் இண்டியா கூட்டணி, நமது கலாச்சாரத்தை தாக்கும் மறைமுகமாக செயல்திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது. சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்கிற தீர்மானத்துடன் இருக்கிறது இண்டியா கூட்டணி. பல லட்சம் ஆண்டுகளாக நாம் கடைப்பிடித்து வரும் கலாச்சாரத்தையும், நம்பிக்கையையும் அழிக்க வெளிப்படையாகவே துணிந்து விட்டனர். நாளை நம் மீதான தாக்குதலையும் நடத்துவார்கள். ஆகவே, நாடு முழுவதும் இருக்கும் சனாதனிகளும், நாட்டை நேசிக்கும் தேசபக்தர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களை தடுத்து நிறுத்தி, சனாதன தர்மத்தைக் காத்திட நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்று பிரதமர் மோடி பேசினார்.