இராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்புக்குக் காரணமான, பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என்று மத்திய அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான வி.கே.சிங் கூறியிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்த்நாக் மாவட்டம் கரோல் பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் கொடுத்தது. இதையடுத்து, இராணுவமும், மாநில காவல் துறையினரும் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, இராணுவத்தினர் மற்றும் போலீஸார் மீது தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில், இராணுவ அதிகாரிகள் 2 பேரும், காவல்துறை டி.எஸ்.பி. ஒருவரும் வீரமரணம் அடைந்தனர்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் மத்திய அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான வி.கே.சிங், பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறுகையில், “பாகிஸ்தானை தனிமைப்படுத்தாத வரை, அவர்கள் இதனை தொடரத்தான் செய்வார்கள். ஆகவே, இந்த விஷயத்தில் நாம் சிந்திக்க வேண்டும். மேலும், பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றால், அந்நாட்டை தனிமைப்படுத்த வேண்டும்.
பாகிஸ்தான் இயல்பாக நடந்து கொள்ளாத வரை, அவர்களுடன் சுமூகமான உறவை தொடர முடியாது. பாகிஸ்தானை பிரிக்க வேண்டும். அப்போதுதான் ஏதாவது நடக்கும். அதற்காக அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். சில நேரம் சினிமா நடிகர்கள் வருவார்கள். கிரிக்கெட் வீரர்கள் வருவார்கள். ஆனால், நாம் அவர்களை பிரிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.