திமுக அரசு வெளியிட்ட அரசாணை 293-ஐ நடைபடுத்த வேண்டும் என்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் 74 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும் என்றும், அரசாணை 293-ஐ நடைமுறை படுத்தவேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் கடந்த பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆட்சியின்போது, போராட்டம் நடத்திய டாக்டர்களிடம், திமுக ஆட்சிக்கு வந்தால் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என, அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
ஆனால், திமுக ஆட்சிக்கு மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், அரசு டாக்டர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஆனால், கோரிக்கையை கைவிடாத அரசு டாக்டர் சங்கம், தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் சென்னை பூந்தமல்லியில் உள்ள மருத்துவக் கல்லூரி இயக்கம் முன்பு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அப்போது, அவர்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள 293 அரசாணை செயல்படுத்த வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்தனர். மேலும், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி பூந்தமல்லி சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்ட 74 அரசு மருத்துவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் செந்தில் பேசுகையில், அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க போதுமான டாக்டர்கள் இல்லை. 3,000 காலி பணியிடங்கள் உள்ளது. ஆனாலும், நாங்கள் பொதுமக்களுக்காக, மிகுந்த மன அழுத்தத்துடன் பணியாற்றி வருகிறோம்.
அரசாணை 293 குறித்து அரசு மருத்துவ சங்கங்களிடையே கருத்து வேறுபாடு இருந்தது உண்மை. அதை பயன்படுத்தி கால தாமதம் செய்யப்பட்டது.
தற்போது, தமிழக அரசின் அரசாணை 293 – ஐ நடைமுறைபடுத்த வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றார்.