காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், இந்திய ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் மற்றும் ஒரு டிஎஸ்பி வீரமரணம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில், அனந்த்நாக் மாவட்டத்தில் கரோல் பகுதி உள்ளது. இந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை தகவல் கொடுத்தது. அதன்பேரில், இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறை இணைந்து அப்பகுதியில் கூட்டு தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில், ராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், இந்தியாவைச் சேர்ந்த மேஜர் ஆஷிஷ் தோன்சாக் மற்றும் கர்னல் மன்பிரீத் சிங், டிஎஸ்பி ஹுமாயுன் பட் ஆகியோர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் டிஎஸ்பி ஹுமாயுன் பட் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இவருக்கு மனைவியும், இரண்டு மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படும் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இது தொடர்பாக, ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறை தரப்பில் அதன் சமூக வலைத்தளமான எக்ஸ் பதிவில், கடந்த ஆகஸ்ட் மாதம் 4 -ம் தேதி அன்று குல்காம் மாவட்டத்தில், இதே முறையில் ஹாலன் முதல் பகுதியில் ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும், தற்போதும், இதே போன்ற தாக்குதலில் ஈடுபட்டனர் என்றும், அதை நமது வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர் என்றும், இந்த தாக்குதலில் 2 அதிகாரிகள் மற்றும் ஒரு டிஎஸ்பி வீரமரணம் அடைந்துள்ளனர்.
மேலும், தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து, பாகிஸ்தான் அடையாளத்துடன் கூடிய ஏராளமான துப்பாக்கி, குண்டுகள் மற்றும் மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன தெரிவிக்கப்பட்டுள்ளது.