2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றிபெறும். நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராவார் என்று மத்திய சாலை போக்குவரத்து த்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் 28 கட்சிகள் கொண்ட கூட்டணியை அமைத்திருக்கின்றன. அதேபோல, ஆளும் பா.ஜ.க. 40 கட்சிகள் கொண்ட மெகா கூட்டணியை அமைந்திருக்கிறது. இரு அணிகளும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டன. பா.ஜ.க. மக்கள் ஆசீர்வாத யாத்திரை உள்ளிட்ட பல்வேறு யாத்திரைகளை நடத்தி, பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்து வருகிறது. மேலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று பா.ஜ.க.வினர் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெறும். நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராவார். தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்பெற்றதால்தான் “இண்டியா” கூட்டணி உருவானது. தனித்துப் போட்டியிட முடியாது, தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதைப் புரிந்துகொண்டு, பலவீனமான எதிர்கட்சியினர் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள்.
60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி செய்யாததை 10 ஆண்டுகளில் நாங்கள் செய்து முடித்திருக்கிறோம். 2070-ம் ஆண்டுக்கு முன்பு கார்பன் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றப் போகிறோம். ஆட்டோ மொபைல் துறை வளர்ச்சி அடைந்திருக்கிறது. நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பிரச்னைகளை வாய்ப்புகளாக மாற்றும் சிலர் உள்ளனர்” என்று கூறியிருக்கிறார்.