சத்தீஸ்கர் மாநிலத்தில் 6,350 கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சத்தீஸ்கர் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார். பின்னர், ராய்கரில் நடந்த நிகழ்ச்சியில் 6,350 கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, 9 மாவட்டங்களில் தலா 50 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த 9 ஆண்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பரிமாண வளர்ச்சிக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
நமது நாட்டின் ஒவ்வொரு மாநிலமும், பிராந்தியமும் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களில் முன்னுரிமை பெறுகின்றன. நாட்டின் அதிகார மையங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. மேலும், நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது, சத்தீஸ்கர் மத்திய அரசிடம் இருந்து மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களைப் பெறுகிறது. சுமார் 6,350 கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே துறை திட்டங்களை மாநிலத்திற்கு அர்ப்பணித்திருக்கிறோம். இதன் மூலம், சத்தீஸ்கரின் ரயில்வே மேம்பாட்டில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது.
இது சத்தீஸ்கரின் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும். மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். சத்தீஸ்கரின் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளாக சத்தீஸ்கரின் பல பரிமாண மேம்பாட்டிற்காக மத்திய அரசு உழைத்திருக்கிறது. ஜி20 மாநாட்டுக்கு வருகை தந்திருந்த உலகத் தலைவர்கள், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சமூகநல மாதிரியால் மிகவும் ஈர்க்கப்பட்டனர். இந்தியாவின் வெற்றிகளிலிருந்து கற்றுக்கொள்வது குறித்து உலகளாவிய அமைப்புகள் பேசுகின்றன” என்று கூறினார்.
சத்தீஸ்கர் கிழக்கு ரயில் திட்டம் கட்டம் -1, சம்பா முதல் ஜம்கா வரை 3-வது ரயில் பாதை, பெந்த்ரா சாலை முதல் அனுப்பூர் வரை 3-வது ரயில் பாதை மற்றும் தலைப்பள்ளி நிலக்கரி சுரங்கத்தை என்.டி.பி.சி. லாரா சூப்பர் அனல் மின் நிலையத்துடன் (எஸ்.டி.பி.எஸ்) இணைக்கும் எம்.ஜி.ஆர் (மெர்ரி-கோ-ரவுண்ட்) அமைப்பு ஆகியவை இத்திட்டங்களில் அடங்கும்.