பாஜக மீது ஊழல் என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் என்றும், மத்திய பாஜக அரசு மீது ஆதாரங்கள் இல்லாமல் அவதூறு பரப்புவதா? என்றும், திமுகவுக்கு, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பாஜக அரசின் ஊழல்களைப் பற்றி பேசி விடக் கூடாது என்பதற்காகவே, சனாதனத்தைப் பற்றி பேசி பாஜக திசை திருப்பிக் கொண்டிருக்கிறது.
எனவே, திமுகவினரும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், பாஜகவின் தந்திரத்திற்கு இடமளித்து விடக்கூடாது, என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது கட்சிக்கு மட்டுமல்ல, கூட்டணி கட்சிகளுக்கும் அறிவுரைகளை அள்ளி வீசியிருக்கிறார்.
கணக்கு தணிக்கைத் துறை தலைவரின் (சிஏஜி) அறிக்கையில் மத்திய அரசின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு திட்டமிடப்பட்டதைவிட அதிக செலவு செய்யப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதைதான் ஊழல் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும், திட்டங்களை செயல்படுத்தும்போது அதில் மாற்றங்கள் இருக்கும். பல நேரங்களில் சிறிய திட்டம், பெரிய திட்டமாக விரிவாக்கப்படலாம். அதனால், திட்டமிட்டதை விட அதிக செலவாகும். இதை சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டும். இது வழக்கமான ஒன்றுதான்.
9 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து 10-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகளால் எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டையும் கூற முடியவில்லை. அதனால், சிஏஜி அறிக்கை காரணம் காட்டி ஊழல் என திரும்ப திரும்ப கூறி வருகின்றன.
கடந்த 2019 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இப்படிதான் எதிர்க்கட்சிகள் ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் என, பொய்யை பரப்பின. அது நீதிமன்றங்களிலும், மக்கள் மன்றங்களிலும் பொய் என்பது நிரூபிக்கப்பட்டது.
ஊழல் நடந்திருந்தால் எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். அதற்கான வாய்ப்புகள் இருக்கும்போது ஊழல் என பேசுவது அவர்களிடம் உண்மையும், நேர்மையும் இல்லை என்பதையும், பாஜக அரசின் மீதும், பிரதமர் மோடியின் மீதும் ஏதாவது அவதூறை பரப்ப வேண்டும் என்ற தீய உள்நோக்கம் இருப்பதையுமே காட்டுகிறது.
கடந்த 2019 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் போலவே, வரும் 2024 -ம் ஆண்டு தேர்தலிலும் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். 3-வது முறையாக நரேந்திர மோடியை பிரதமராக தனிப்பெரும்பான்மையுடன் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். முதல்வர் ஸ்டாலினின் கனவு கனவாகவே முடியும்.
சனாதனத்தைப் பற்றி பேசி பாஜக திசைதிருப்பவில்லை. திமுக அரசின் மீதான மக்களின் கோபத்தை மடைமாற்றவே, திட்டமிட்டு எழுதி வைத்து முதலமைச்சரின் மகனும், அமைச்சருமான உதயநிதி, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்றார். உதயநிதி பேசியதற்குதான் பாஜக பதில் கொடுக்கிறது. உதயநிதியை பாஜக தலைவர்கள் யாரும் அப்படி பேச சொல்லவில்லை. அதனால் திசைதிருப்ப வேண்டிய அவசியமும் பாஜகவுக்கு இல்லை.
கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில், இதுவரை காணாத பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதனால் பொருளாதாரத்தில் உலகின் 5-வது நாடாக நம் பாரதம் உயர்ந்துள்ளது.
சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வந்துதான், வீடுகள் தோறும் கழிவறை, வீடுகள்தோறும் மின் இணைப்பு, வீடுகள்தோறும் சமையல் எரிவாயு இணைப்பு, வீடுகள் தோறும் குழாய்கள் மூலம் குடிநீர், அனைவருக்கும் வங்கிக் கணக்கு என அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தால், அனைவருக்கும் சொந்த வீடு என்பது சாத்தியாகி வருகிறது. மோடி அரசின் சாதனைகளை பட்டியலிட்டால் அதற்கு பக்கங்கள் போதாது.
சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு வாஜ்பாய் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சியில்தான் பாரதத்தின் அனைத்து மாநிலங்கள், நகரங்கள் தங்க நாற்கரச் சாலை திட்டத்தின் மூலம் சாலைகளால் இணைக்கப்பட்டன. அதன்பிறகு பாரதத்தின் வளர்ச்சியே துவங்கியது.
எனவே, வளர்ச்சித் திட்டங்கள் பற்றி பாஜகவுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை.
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தாக, பொய்யான தகவலை முதலமைச்சர் ஸ்டாலின் திரும்ப திரும்ப கூறி வருகிறார்.
இவர்களின் இந்த அவதூறுகளுக்கு 2019 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலேயே மக்கள் பதிலடி கொடுத்து விட்டனர். 2014 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை விட, 2019 -ல் 20 தொகுதிகளில் கூடுதலா பாஜக வெற்றி பெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தனது பொய் பிரசாரத்தை தொடர்வதால் 2019 -ம் ஆண்டு தேர்தலைவிட வரும் 2024 -ம் ஆண்டு தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெல்வது உறுதியாகி உள்ளது.
எப்போதும் அரசியல் ஆதாயங்களுக்காக, தேர்தல் வெற்றி பெறுவதற்காக பொய்யை பரப்பாமல், 2021 -ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றுங்கள்.
திமுக தேர்தல் வாக்குறுதியின்படி, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ. 1,000 உரிமைத் தொகை கொடுங்கள். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் கொடுங்கள். விவசாயக் கடன்களை ரத்து செய்யுங்கள். அதைவிடுத்து எதிர்க்கட்சிகளைப் போல எப்போதும் அரசியல் பேசிக் கொண்டிருந்தால் வரும் தேர்தலில் அதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.