இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பினர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு, ரூ.3 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.
பாரத இறையான்மைக்கு எதிராகவும், தீவிரவாத செயல்கள் மிகுந்த ஈடுபாடு உடையதுமான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடை செய்தது.
இந்த அமைப்பில் தொடர்புடைய சிலர், கேரள மாநிலம், கொச்சியில் உள்ளதாக மத்திய உளவுத்துறை தெரிவித்தது. அதன்பேரில், கொச்சியில் முக்கிய பகுதிகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த என்ஐஏ அதிகாரிகள், பாலக்கோடு மாவட்டம் பட்டாம்பியைச் சேர்ந்த அப்துல் ரஷீத், முகமது மன்சூர், செர்ப்புளச்சேரியைச் சேர்ந்த முகமது அலி, கூற்றாநாட்டைச் சேர்ந்த சாகுல் ஹமீது, எர்ணாகுளம் பரவூரைச் சேர்ந்த அப்துல் வஹாப் உள்ளிட்டோரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
என்.ஐ.ஏ விசாரணைக்கு பயந்து, இவர்கள் அனைவரும் தலைமறைவானார்கள். இந்த நிலையில், இவர்களை பிடிப்பதற்கு என்.ஐ.ஏ. தீவிரம் காட்டி வருகிறது.
இதனை தொடர்ந்து, கேரளாவில் பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், என்ஐ.ஏ. அதிகாரிகளால் தேடப்படும் குற்றவாளிகள் அனைவரது புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும், தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்கள் பெயர், முகவரி உள்ளிட்டவை அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் என்றும், அவ்வாறு தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ 7 லட்சம் வரை பரிசு வழங்கப்படும் என்றும் தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.