பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, அகண்ட பாரதத்தின் அதிபரே என்று மதுரையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாள் விழா நாளை (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் தடபுடல் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். குறிப்பாக, இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாட்டைப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பது, உலக நாடுகள் மத்தியில் அவரது செல்வாக்கை உயர்த்தி இருக்கிறது. தவிர, 2024 நாடாளுமன்றத் தேர்தல் வேறு நெருங்கி வருகிறது.
இதையடுத்து, பிரதமர் மோடியின் பிறந்தநாளை வெகு சிறப்பாகக் கொண்டாட பா.ஜ.க.வின் திட்டமிட்டு, பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் பிறந்தநாள் வாழ்த்துப் போஸ்டர் அச்சடித்து ஒட்டி இருக்கின்றனர். அந்த வகையில், மதுரையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
அதாவது, பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்து முன்னிணியைச் சேர்ந்த மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் கரிமேடு எஸ்.அழகர்சாமி என்பவர், மாநகரப் பகுதிகளில் போஸ்டர் அச்சடித்து ஒட்டி இருக்கிறார். அந்த போஸ்டரில், “ஊழல் திராவிடத்தை விரட்டி தமிழகத்திலும் சனாதன ஆட்சியை மலரச் செய்யும் அகண்ட பாரத்தின் அதிபரே… உம்மை வணங்குகிறோம்” என்று அச்சிடப்பட்டிருக்கிறது. இந்த போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி இருக்கிறது.