தீவிரவாதிகளுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த ராணுவ மேஜரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர், அவரது பூத உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஜம்மு காஷ்மீரில், அனந்த்நாக் மாவட்டத்தில் கரோல் பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், இந்திய இராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் இணைந்து அப்பகுதியில் கூட்டாகத் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில், இராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், மேஜர் ஆஷிஷ் தோன்சாக், கர்னல் மன்பிரீத் சிங் மற்றும் டிஎஸ்பி ஹுமாயுன் பட் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர்.
இந்த மோதலில், மூன்று பேர் வீரமரணம் அடைந்த நிலையில், தற்போது படுகாயமடைந்த மற்றொரு இராணுவ வீரர், மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார். இதனால், வீரமரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.
இதனிடையே, ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் என்ற இடத்தில் மேஜர் ஆஷிஷ் தோன்சாக்கின் உடல், ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
அப்போது, வழி நெடுகிலும் அவரது பூத உடலுக்கு பொது மக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், அவரது பூதஉடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக ராணுவ வீரர்கள், வானத்தை நோக்கி துப்பாக்கி குண்டுகளால் சுட்டு மரியாதை செலுத்தினர்.
இராணுவ வீரர்கள் இறுதி ஊர்வலத்தில், பொது மக்கள் கண்ணீர் சிந்தி வீரஅஞ்சலி செலுத்தினர். இந்த காட்சி காண்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.