நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “4 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே வைத்திருந்த கட்சி ஆட்சியிலும், 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கட்சி எதிர்க்கட்சியாகவும் இருந்ததை இந்த நாடாளுமன்றக் கட்டடம் கண்டிருக்கிறது. நாம் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழையும்போது நமக்கு புதிய நம்பிக்கை பிறக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா உரையாற்றினார். பிறகு, டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு வெற்றிகமாக நடத்தப்பட்டதற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தங்கர் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர். தொடர்ந்து உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “நாம் அனைவரும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடத்துக்கு விடை கொடுக்கவிருக்கிறோம்.
இக்கட்டடம் சுதந்திரத்துக்கு முன்பாக பிரிட்டிஷ் இந்தியாவின் இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலின் இடமாக இருந்தது. சுதந்திரத்துக்கு பிறகு, இது நாடாளுமன்றம் என்கிற அடையாளத்தைப் பெற்றது. இக்கட்டடத்தைக் கட்டுவதற்கான முடிவு அந்நிய ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.
ஆனால், இக்கட்டடத்தைக் கட்டுவதற்கான பணம், கட்டுமானத்துக்கான உழைப்பு நம்முடைய மக்களுடையது என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம். நாடாளுமன்றத்தில் நமக்குள் பல கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருந்திருக்கிறது. அதேசமயம், அதையும் தாண்டி நம்மிடம் ஒரு நட்பு இருக்கிறது.
இந்த நாடாளுமன்றக் கட்டடத்தில் எங்களை விட பத்திரிக்கையாளர்கள் அதிக நேரம் செலவளித்திருப்பார்கள். அவர்களுக்கு இக்கட்டடத்தை விட்டுச் செல்வது வருத்தம் அளிக்கும் விஷயமாக இருக்கும். எனினும், இந்த இடம் பல ஆண்டுகளுக்குப் பிறகும் இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவாக நீடிக்கும்.
சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடைய செய்திருக்கிறது. அதேபோல, சந்திரயான் 3-ன் வெற்றி இந்தியாவால் மட்டும் கொண்டாடப்படவில்லை. ஒட்டுமொத்த உலகமும் பெருமிதப்படுகிறது. சந்திரயான்-3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி சாதித்த அனைத்து விஞ்ஞானிகளையும் பாராட்டுகிறேன். அதேபோல ஜி 20 உச்சி மாநாட்டின் வெற்றி என்பது 140 கோடி இந்தியர்களின் மகத்தான வெற்றி.
ஜி20 மாநாட்டால் இந்தியா குறித்த எதிர்மறை எண்ணம் மாற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஜி20 உச்சி மாநாடு பதிலளித்திருக்கிறது.
ஜி20 உச்சி மாநாட்டில் கூட்டு பிரகடனம் ஏற்படுவதை இந்தியாவின் சக்தி உறுதிப்படுத்தியது. உலக நாடுகள் நம் பாரத நாட்டை நண்பனாக பார்க்கின்றன. இந்தியா தற்போது தன்னம்பிக்கை மிக்க நாடாக மிளர்கிறது. நாம் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு செல்கிறோம். ஆனால், வரும் தலைமுறையினருக்கு பழைய நாடாளுமன்ற கட்டடம் எப்போதும் உத்வேகத்தை அளிக்கும். முன்பு, நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது பெண் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவமும், பங்களிப்பும் அதிகரித்து வருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினராக இக்கட்டடத்திற்குள் நுழைந்தபோது மக்களிடமிருந்து இவ்வளவு அன்பைப் பெறுவேன் என்று நான் நினைக்கவில்லை. மேலும், நான் நாடாளுமன்றத்துக்குள் ஒரு எம்.பி.யாக உள்ளே நுழைந்தபோது ஜனநாயகத்தின் கோவில் என்பதற்காக கீழே விழுந்து வணங்கினேன். அது எனக்கு உணர்ச்சி மிகுந்த தருணம்.
ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த குழந்தை, இரயில்வே பிளாட்பார்மில் வளர்ந்த குழந்தை நாடாளுமன்றத்துக்குள் நுழையும் என கனவா கண்டிருக்கும்? இந்த நாட்டு மக்களின் பேரன்புக்கு பெரும் நன்றி.
4 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே வைத்திருந்த கட்சி ஆட்சியிலும், 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கட்சி எதிர்க்கட்சியாகவும் இருந்ததை இந்த நாடாளுமன்றக் கட்டடம் கண்டிருக்கிறது. கடந்த காலத்தையும், எதிர்க்காலத்தையும் இணைக்கும் இடத்தில் நாம் இருப்பது பெருமையாக இருக்கிறது. நாம் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழையும்போது நமக்கு புதிய நம்பிக்கை பிறக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அனைத்து உறுப்பினர்களும் இந்த நாடாளுமன்றக் கட்டடம் குறித்த தங்கள் நினைவுகளை பகிருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.