ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-2 என இரு அணிகளும் சமநிலையில் இருக்கின்றன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று ஜஹன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவிச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான குயின்டன் டி காக்கும் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து ரஸ்ஸி வேண்டர் டுசென் 30 ரன்களுக்கும், ஹென்றிச் கிளாசென் 6 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம் – டேவிட் மில்லர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐடன் மார்க்ரம் 9 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 93 ரன்களை சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 63 ரன்களை எடுத்திருந்த டேவிட் மில்லரும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த மார்கோ ஜான்சென் – பெஹ்லுக்வாயோ இணையும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்களைச் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 10 ரன்களிலும், ஜோஷ் இங்கிலிஸ் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து மார்கோ ஜான்சென் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் – மார்னஸ் லபுஷாக்னே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 6 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 71 ரன்களில் மிட்செல் மார்ஷ் ஆட்டமிழந்தார். பிறகு அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தது.
இதனால் ஆஸ்திரேலிய அணி 34.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ ஜான்சென் 5 விக்கெட்டுகளையும், கேசவ் மகாராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதுடன், 3-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.