விநாயகர் சதுர்த்தி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழகத்தில் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் முன்னெடுத்துச் செல்லும் அதே நேரத்தில், அதிகாரிகள் சிலர் அரசு விதிமுறைகளைச் சொல்லி தடை போடுவதாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் விநாயகர் சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இங்கு திடீரென வந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து 400 சிலைகளுடன் இருந்த கூடத்திற்குச் சீல் வைத்தனர்.
பிளாஸ்ட் ஆஃப் ஃபாரிஸ் என்ற இரசாயனம் கலவை கலந்து சிலை தயாரிக்கப்பட்டதாகப் புகாரின் பேரில் சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
இந்த தகவல் அறிந்த சிவசேனா கட்சி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் மற்றும் சிலைகளுக்கு ஆர்டர் கொடுத்தவர்கள் அப்பகுதியில் திரண்டு அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும், பல லட்சம் ரூபாய்க் கடன் வாங்கி சிலை செய்துள்ளதாக, சிலை செய்பவர்களும் கதறினர். ஆனாலும், அதிகாரிகள் தங்களது முடிவிலிருந்து மாறவில்லை. இதனால், பலரும் விநாயகர் சிலை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
பெரம்பலூரில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வெகு விமரிசையாக நடத்த ஹிந்து அமைப்புகள் முடிவு செய்தன. இதற்காக, காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெறவும் முடிவு செய்யப்டப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மிகக் குறுக்கிய நாட்களே இருந்ததால், பாடாலூரைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் என மொத்தம் 70 பேர் ஒன்று திரண்டனர்.
அவர்கள் அனைவரும், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க குட்டியானை என்று சொல்லப்படும் டாடா ஏஸ் வாகனத்தில் செல்ல முயன்றனர். இதற்கு, காவல் துறை அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெரம்பலூர் சங்கு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.