நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாஞ்சோலை வனப் பகுதியில் விடப்பட்டிருந்த அரிகொம்பன் யானை ஊத்து மற்றும் நான்குமுக்கு எஸ்டேட் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சேதப்படுத்தி உள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
சின்னக்கானல், சந்தன்பாறை, போடிமெட்டு ஆகிய மக்கள் வசிக்கும் பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக 11 பேரை மிதித்துக் கொன்றது. மேலும், நியாயவிலைக்கடை கடைகளில் புகுந்து அரிசியை மட்டும் ருசி பார்த்தது. இதனால், இந்த யானைக்கு அரிசிக் கொம்பன் என பெயர் வந்தது.
ஆனால், 2005 முதல் 2013 வரை இந்த பகுதிகளில் யானை தாக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 34 என்றும், இது அரிசிக் கொம்பனின் வேலை என்றும் பதைபதைக்கிறார்கள் கிராம மக்கள்.
அரிசிக்கொம்பனை கும்கி யானையாக மாற்ற வனத்துறை முடிவு செய்தனர். ஆனால், அரிசிக்கொம்பனை சிறைபிடிக்காமல், வனப்பகுதிக்கு அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால், திட்டத்தை மாற்றிய வனத்துறையினர் 150 வனத்துறையினர், 5 மயக்க வியல் மருத்துவர்கள், 4 கும்கி யானைகள் என பெரும் குழுவினர் இணைந்து அரிசிக்கொம்பனை பெரும் போராட்டத்திற்குப் பின்னர் மடக்கிப் பிடித்தனர்.
அதன் கழுத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி, லாரியில் ஏற்றி, அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர். இதனால், பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த நிலையில், நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாஞ்சோலை வனப் பகுதியில் விடப்பட்டிருந்த அரிகொம்பன், யாரும் எதிர்பாராத வகையில் திரும்பி வந்துள்ளது.
குறிப்பாக, ஊத்து மற்றும் நான்குமுக்கு எஸ்டேட் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சேதப்படுத்தியுள்ளது.
இதனால், அரிகொம்பன் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொது மக்கள் தங்கள் உயிருக்குப் பயந்து வீடுகளுக்குள் முடங்கி வருகின்றனர்.