ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 5-வது முறையாக உயர்த்தப்பட்டு சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கி வெற்றிகரமாக நகர்த்தப்பட்டிருப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு ஆராய்ச்சியை நடத்தி வரும் நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. கடந்த 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட், ஆதித்யா எல்-1 விண்கலத்தை சுமந்துகொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாகப் பாய்ந்தது.
இதன் பிறகு, ஆதித்யா எல்-1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த விண்கலம், 4 மாத பயணத்திற்குப் பிறகு, அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி தனது இலக்கை அடையும் என்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. மேலும், லாக்ராஞ்சன் எல் 1 என்கிற இடத்தில் நிலைநிறுத்தப்பட்டு, அங்கிருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனைக் கண்காணித்து ஆய்வு பணியில் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து, ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக வெற்றிகரமாக உயர்த்தப்பட்டு வந்தது. கடந்த 15-ம் தேதி 4-வது முறையாக சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்ட நிலையில், அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை செப்டம்பர் 19-ம் தேதி மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று 5-வது முறையாக ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டிருக்கும் தகவலில், “இன்று அதிகாலை 2 மணியளவில் விண்கலத்தின் உயரம் 5-வது முறையாக அதிகரிக்கப்பட்டது. தற்போது, சூரியனின் எல்-1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக நகர்ந்திருக்கிறது. சுற்று வட்டப்பாதை உயர்வு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் சீராக உள்ளது” என்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.