மதுரை சிறுதூர் கண்ணனேந்தல் பகுதிக்கு உட்பட்ட பறையாத்திகுளம் கண்மாய் அருகே நாயக்கர் காலத்து கருப்பசாமி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக தண்ணீரில் மூழ்கிக் கிடந்த சிலையை கண்ணனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பொன்பாலகிருஷ்ணன், சி.எஸ்.ஜெகநாதன், பிரகாஷ், முத்துராமன் ஆகியோர் கண்டெடுத்து உள்ளனர்.
இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலையை ஒப்படைத்தனர். இந்த சிலை குறித்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் து.முனீஸ்வரனிடம் கேட்டபோது, “தமிழ்நாட்டின் கிராமங்களில் பரவலாக காணப்படுகின்ற வழிபாட்டு முறையில் முக்கியமானது கருப்பசாமி வழிபாடு.
குறிப்பாக சிறுதெய்வ வழிபாட்டில் நாட்டார் பண்பாட்டு மரபு முக்கிய பங்கு வகிக்கிறது. கிராம காவல் தெய்வ வழிபாடுகளில் கருப்பசாமி, கருப்பன் எனவும் அழைக்கப்படுவதுண்டு. குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களால் கருப்பசாமி அழைக்கப்படுகிறார். பொதுவாக பெண் தெய்வங்களின் காவல் தெய்வமாக உள்ளார்.
கண்டறியப்பட்ட சிலை நின்ற கோலத்தில் தலையில் பெரியத் தலைப்பாகை , நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் கதை, சங்கு முழங்காலுக்கு கீழே பெருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது . இச்சிற்ப வடிவ அமைப்பை பொறுத்து நாயக்கர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் எனவும், இந்த சிலை குறித்து முழுமையான ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.