மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது எனவும், மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறிய, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரிக்கு மத்திய உள்துறை அமித்ஷா பதிலடி கொடுத்திருக்கிறார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, நேற்று நடந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியிடம் கேட்டபோது, இது எங்களுடைய மசோதா என்று கூறினார். அதேபோல, காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு உரிமை கொண்டாடினர்.
இந்த நிலையில், நேற்று நடந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின்போது பேசிய, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, “1996-ல் காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவை, ராஜிவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோர் தலைமையிலான காங்கிரஸ் அரசுகள் நிறைவேற்ற முயன்றன. சில முறை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை, மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. அதேசமயம், மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அது இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது. இதை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி இருக்கிறார்” என்று கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “காங்கிரஸ் தலைமையான மத்திய அரசில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒருபோதும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டதே இல்லை. அதேபோல, பழைய மசோதாவும் நிலுவையில் இல்லை. 2014-ம் ஆண்டு 15-வது மக்களவை கலைக்கப்பட்டவுடன், அந்த மசோதா காலாவதியாகி விட்டது. நாடாளுமன்றத்தில் கூறியதை நிரூபிக்க ஏதேனும் ஆதாரம் இருந்தால் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான ஆதாரம் அவரிடம் இல்லா விட்டால், அவரது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்று ஆவேசமாகக் கூறினார்.