19-வது ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் பிரிவில் இந்தியா-மலேசியா போட்டி மழையால் தடைச் செய்யப்பட்டது. இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.
ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் பிரிவில் காலிறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று இந்தியா மற்றும் மலேசியா அணிகள் மோதின. இந்திய அணி தன் இன்னிங்க்ஸ் ஆடி முடித்த நிலையில், மலேசியா பேட்டிங் செய்ய வந்த போது மழை வந்ததால் போட்டி கைவிடப்பட்டது. இந்த தொடருக்கான தரவரிசையில் இந்திய அணி, மலேசியாவை விட முன்னே இருப்பதால் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக இந்தப் போட்டியில் மலேசியா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க ஜோடி ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா அதிரடி ஆட்டம் ஆடினர். மந்தனா 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின் மழை வந்ததால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்பின் ஜெமிமா ரோட்ரிகஸ், ஷபாலி அதிரடியாக ரன்களை சேர்த்தனர். ஷபாலி வர்மா 4 போர், 5 சிக்ஸ் என 39 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார்.
ஷபாலி ஆட்டமிழந்த பின் வந்த ரிச்சா கோஷ் அதிரடியாக ஆடி 7 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். ரோட்ரிகஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 47 ரன்களை சேர்த்தார். இந்திய அணி 15 ஓவர்களில் 173 ரன்கள் குவித்து இருந்தது. அடுத்து மலேசியா அணி ஆடத் துவங்கியது. இரண்டு பந்துகள் வீசப்பட்ட நிலையில், மீண்டும் மழை வந்ததால் போட்டி கைவிடப்பட்டது.