உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வழங்குவது பாராட்டுக்குரியது எனப் பாரதப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், இது சாமானிய மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023-ஐ பாரதப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்திய பார் கவுன்சில் ‘நீதி வழங்கல் அமைப்பில் வளர்ந்து வரும் சவால்கள்’ என்ற தலைப்பில் நடைபெறுகிறது. 23 மற்றும் 24 -ம் தேதி என 2 நாட்கள் நடைபெறுகிறது.
நாட்டிலேயே முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் வளர்ந்து வரும் சட்ட நடைமுறைகள், எல்லை தாண்டிய வழக்குகளில் உள்ள சவால்கள், சட்ட தொழில் நுட்பம், சுற்றுச்சூழல் சட்டம் போன்ற தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டைப் பாரதப் பிரதமர் மோடி துவக்கிவைத்துப் பேசுகையில், தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு சட்ட தலைப்புகளில் அர்த்தமுள்ள உரையாடல் மற்றும் கலந்துரையாடலுக்கான தளமாக இது அமைந்துள்ளது என்றும், இதன் நோக்கம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், அனுபவங்கள் மற்றும் யோசனைகளைப் பரிமாறிக்கொள்வதற்கு இது சிறந்த வாய்ப்பாக உள்ளது என்றும், குறிப்பாக, சட்ட பிரச்சினைகளில் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் புரிதலை வலுப்படுத்துவதை நோக்கி இந்த மாநாடு செல்லும் என்றும், அதன் நோக்கம் வெற்றி பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் உலகளாவிய சட்டத்துறை நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாட்டிலேயே முதல் முறையாக இந்த மாநாடு நடைபெறுவதால் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.