டெல்லியில் நடந்த வழக்கறிஞர்கள் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போதைய விதிமுறைகள்படி, நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், தண்டனை விகிதமும் குறைவாக இருப்பதால், சிறைகளில் விசாரணைக் கைதிகள் நிரம்பி வழிகின்றனர் என்று கூறியிருக்கிறார்.
அகில இந்திய பார் கவுன்சில் சார்பில், சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இம்மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், பிரிட்டன் சட்ட அமைச்சர் அலெக்ஸ் சால்க் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இம்மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “நாட்டின் ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பாற்றியதில் வழக்கறிஞர்கள் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர். பழங்காலத்தில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பஞ்சாயத்து நடைமுறை அமலில் இருந்தது. அதனடிப்படையிலேயே, தற்போது லோக் அதாலத் நடைமுறை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. இந்த நடைமுறையில் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான மொழியில் சட்டங்கள் இருக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு புதிய சட்டங்கள் எளிமையான மொழியில் எழுதப்படுகின்றன. மேலும், இந்தியாவின் பல்வேறு மொழிகளில் சட்டங்களை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தரவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இதன்மூலம் சமானிய மக்களும் தீர்ப்புகளைப் படித்து புரிந்து கொள்ள முடிகிறது. இதற்காக உச்ச நீதிமன்றத்தை மனதாரப் பாராட்டுகிறேன்.
சர்வதேச அளவில் சைபர் தாக்குதல், செயற்கை நுண்ணறிவை தவறாக பயன்படுத்துவது, பண மோசடி உள்ளிட்ட பிரச்சனைகள் மிகப்பெரிய சவால்களாக உருவெடுத்து வருகின்றன. இப்பிரச்சனைகளுக்கு ஒரு நாடு, ஒரு அரசால் தீர்வு காண முடியாது. ஆகவே, சர்வதேச அளவில் வலுவான சட்ட கட்டமைப்பை உருவாக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு புதிய பாதை திறக்கப்பட்டிருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்பு நிலவின் தென் துருவத்தில் இந்தியா வெற்றிகரமாக கால் பதித்தது. இதுபோல் பல்வேறு புதிய சாதனைகளை படைத்து வரும் இந்தியா, வரும் 2047-ம் ஆண்டில் வளர்ந்த நாடாக உருவெடுக்கும்” என்றார்.
மாநாட்டின் நிறைவு நாளான இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசுகையில், “தற்போதைய விதிமுறைகள்படி, நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. அதேசமயம், தண்டனை விகிதமும் குறைவாக இருப்பதால், சிறைகளில் விசாரணைக் கைதிகள் நிரம்பி வழிகின்றனர். இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பில், சட்டம் காலனித்துவம் கொண்டதாக இருந்தது. ஆகவே, குற்றவியல் நீதி அமைப்பில் 3 புதிய சட்டங்கள் வரவிருக்கின்றன. இந்த 3 புதிய சட்டங்களும் காலனித்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்காது. அதேபோல, தொழில்நுட்பத்தை மேம்படுத்த புதிய சட்டங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. மின்னணு மற்றும் டிஜிட்டல் பதிவுகளுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. டிஜிட்டல் சாதனங்களில் கிடைக்கும் ஆதாரங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன” என்றார்.