பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய இரயில்வே வரலாறு காணாத மாற்றத்தைக் கண்டிருப்பதாகவும், இது ஆத்ம நிர்பர் பாரத் என்கிற நமது இலக்கை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.
இரயில்கள் மற்றும் இரயில் நிலையங்களின் தரம், சேவை உள்ளிட்டவற்றை உயர்த்தும் வகையில், அதிநவீன வசதிகளுடன் வந்தே பாரத் இரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, இரயில் நிலையங்களும் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஏற்கெனவே 25 வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, 500-க்கும் மேற்பட்ட இரயில் நிலையங்கள் லிப்ஃட், எஸ்கலேட்டர் உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நெல்லை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் உட்பட 9 வழித்தடங்களில் இயங்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்களை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்தபடியே காணொளிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, வந்தே பாரத் இரயில்கள் மூலம் பயண நேரம் குறையும் என்று கூறியதோடு, அமிர்த காலத்தில் கட்டப்படும் இரயில் நிலையங்கள் அமிர்த பாரத நிலையங்கள் என்று அழைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த சூழலில்தான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் இந்திய இரயில்வே வரலாறு காணாத மாற்றத்தைக கண்டிருப்பதாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஜெ.பி.நட்டா வெளியிட்டிருக்கும் பதிவில், “இன்று 9 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மேம்பட்ட மற்றும் உள்நாட்டு தயாரிப்பான இரயில், இந்தியாவில் இரயில் பயணத்தின் இயக்கவியலை மாற்றி இருக்கிறது. மேலும், இது ஆத்ம நிர்பர் பாரத் என்கிற நமது இலக்கை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இரயில்வேயின் முன்னேற்றங்கள் புதிய சகாப்தத்திற்கு வழிவகுக்கும். வளர்ந்த இந்தியாவை அடைவதில் முன்னேற்றம் அடைய உதவும். பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் எங்கள் இரயில்வே முன்னோடியில்லாத மாற்றத்தைக் கண்டிருக்கிறது. மேலும், எங்கள் இரயில் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதிலும், எங்கள் மக்களின் பயணத்தை எளிதாக்குவதிலும் நாங்கள் விரைவான முன்னேற்றத்தை அடைந்திருக்கிறோம். அமிர்த காலத்தில் நாங்கள் எங்கள் பயணத்தை முன்னெடுத்துச் செல்லும்போது, மகத்தான முன்னேற்றங்களை அடைகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.