மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையினர் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கைத்துப்பாக்கிகள், 3 கையெறி குண்டுகள் மற்றும் ஏராளமான ஆயுதக் குவியல்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் கோகர்நாக் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கும், மாநில காவல்துறையினருக்கும் கடந்த 12-ம் தேதி ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தீவிர தேடுகல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில், இராணுவ கர்னல், மேஜர், வீரர் மற்றும் மாநில காவல்துறை டி.எஸ்.பி. என 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கூடுதல் இராணுவம் வரவழைக்கப்பட்டு தீவிரவாதிகள் வேட்டை தொடங்கியது. ஒரு வாரம் நீடித்த தேடுதல் வேட்டையில் லஷ்கர் இ தொய்பா கமாண்டர் உட்பட மொத்த தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும், எல்லைப் பகுதியிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையிலும், பாதுகாப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக மத்திய ரிசர்வ் காவல்துறையினருக்கும், மாநில காவல்துறையினருக்கும் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த கூட்டு நடவடிக்கைக் குழுவினர் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகள் 5 பேரை கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேற்கண்ட 5 பேரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்பதும், அவர்களதுபெயர் ஆதில் ஹுசைன் வானி, சுஹைல் அஹ்மத் தர், ஐத்மத் அஹ்மத் லாவே, மெஹ்ராஜ் அஹ்மத் லோன் மற்றும் சப்சார் அஹ்மத் கர் என்பதும் தெரியவந்தது. பின்னர், அவர்களிடமிருந்து 2 கைத்துப்பாக்கிகள், 3 கையெறி குண்டுகள், ஒரு யு.பி.ஜி.எல்., 2 கைத்துப்பாக்கி மேகசின்கள், 12 பிஸ்டல் ரவுண்டுகள் மற்றும் 21 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கைமோ காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக மாநில காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.