காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சியை அகற்ற ராஜஸ்தான் மக்கள் முடிவு செய்து விட்டார்கள். மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் நடத்தப்பட்ட யாத்திரைக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆகவே, ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறது. மேலும், பா.ஜ.க. சார்பில் பல்வேறு யாத்திரைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், ஜெய்ப்பூரில் பரிவர்தன் சங்கல்ப் மகாசபா என்கிற பெயரில் ஒரு மெகா கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, “ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை நடத்திய விதத்திற்காக ஒரு பெரிய பூஜ்ஜியத்தைப் பெற வேண்டும். ராஜஸ்தான் மக்கள் கெலாட் அரசை அகற்றி பா.ஜ.க.வை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அசோக் கெலாட் அரசு அம்மாநில இளைஞர்களின் 5 ஆண்டு காலத்தை வீணடித்திருக்கிறது. ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வரும். மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் நடத்தப்பட்ட யாத்திரைக்கு மக்களிடம் இருந்து பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது.
எங்களது ‘பரிவர்தன் யாத்திரை’ மூலம் ராஜஸ்தானில் ஏற்படும் மாற்றத்தை என்னால் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் நடைபெற்ற மாற்றத்திற்கான அணிவகுப்பு, மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது. யாத்திரையின்போது எங்களுக்குக் கிடைத்த பாராட்டும், வரவேற்பும் மாநிலத்தில் மாறிவரும் அரசியல் தலையெழுத்துக்கான அறிகுறியாகும். இந்தியா தலைமையில் நடத்தப்பட்ட ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றியைக் கண்டு, டெல்லியின் நண்பர்களாக இல்லாத நாடுகள் வியந்து போயிருக்கின்றன. பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தது யார்? நான் அல்ல, உங்களது ஆதரவால்தான் இது சாத்தியமானது.
ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக நாங்கள் உத்தரவாதம் அளித்தோம். இன்று, ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அனைவரும் பார்க்கலாம். காங்கிரசால் 30 ஆண்டுகளுக்கு முன்பே மகளிர் இடஒதுக்கீட்டை கொண்டு வந்திருக்கலாம். ஆனால், பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை அவர்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. காங்கிரஸ் மற்றும் ‘திமிர்’ கூட்டணிக் கட்சிகள் பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள். ஆகவே, காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்ஜிய மதிப்பெண்கள்தான் கிடைக்க வேண்டும். ராஜஸ்தான் மக்கள் கெலாட் அரசை அகற்றி பாஜ.க.வை மீண்டும் கொண்டு வர முடிவு செய்து விட்டனர்” என்றார்.