காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆதாரம் இருந்தால் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம் என்று கனடாவிடம் அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தி இருக்கிறார்.
காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர்களில் ஒருவரான ஹர்தீப் சிங் நிஜர், கடந்த ஜூலை மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தால் தூதர்கள் வெளியேற்றம், விசா நிறுத்தம் என இரு நாட்டு இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ‘வெளிநாட்டு உறவுகள் கவுன்சில் விவாதத்தில்’ பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ஹர்தீப் சிங் நிஜர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கனடா அரசு இதுவரை எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. கனடாவில் கடந்த சில ஆண்டுகளில் திட்டமிடப்பட்ட குற்றங்கள் நிறைய நடந்திருக்கிறது.
இதுகுறித்து அந்நாட்டு அரசுக்கு பல்வேறு தகவல்களை அளித்திருக்கிறோம். தீவிரவாதத் தலைவர்கள் பலர் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். அவர்களை ஒப்படைக்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்திருக்கிறோம். ஆனால், கனடா அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக இது அனுமதிக்கப்படுகிறது என்பதே எங்களது கவலை.
எங்களது இராஜதந்திரிகள் அச்சுறுத்தலுக்கு ஆளாவதும், எங்களது துணை தூதரகங்கள் தாக்கப்படும் சூழலும் நிலவுகிறது. ஆகவே, உங்களிடம் குறிப்பிட்ட ஏதாவது ஆதாரம் இருந்தாலோ அல்லது உங்களுக்கு ஏதேனும் தொடர்புடையதாக இருந்தாலோ எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அதைத் தெரிந்துகொள்ளவும், நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒரு விதத்தில் திருப்பம் இல்லாமல் படம் முழுமையடையாது” என்று கூறியிருக்கிறார்.
பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர், காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் குறித்து என்னிடம் கேள்வி எழுப்புவது பொருத்தமற்றது. நான் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவன் இல்லை என்று காட்டமாக பதிலளித்தார்.