ஒரு மனிதன் எவ்வளவுதான் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவனது மகிழ்ச்சியைக் கெடுக்கும் ஒரே ஒரு விஷயம் கடன்.
கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று, கடனைப் போல பெரிய பிரச்சினை எதுவும் இல்லை, துக்கமும் இல்லை என்று கம்பர் பெருமான் மிக அழகாக தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்று நாட்டில் கடன் வாங்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. அந்த அளவுக்குத் திரும்பிய திசை எங்கும் வங்கிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் கடன் வாங்கியவர்கள், அதை உரியக் காலத்தில் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக, வீடு கட்டவும், கார், பைக் போன்ற வாகனங்கள் வாங்கவும், இன்னும் பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்கும் பலர் கடன் வாங்குகின்றனர். இன்னும் சிலரோ கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, கண்ணில் பட்ட ஆடம்பரப் பொருட்களை எல்லாம் வாங்கிக் குவித்து வருகின்றனர்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப, கடன் நமது கழுத்துக்கு மேலே சென்றால், கழுத்தை நெரிக்க ஆரம்பித்து விடும்.
முதலில் நாம் வாங்கும் கடன் சாதாரணமாகத்தான் தோன்றும். பின்பு அதுவே பழக்க தோஷமாக மாறி, எல்லாவற்றுக்கும் கடன் வாங்கும் தைரியத்தைக் கொடுத்து விடும். இப்படி கடன் வாங்கியவர்கள் தொடர்ந்து கடன் வாங்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுபவர்கள். ஒரு கட்டத்தில், மலை போல் குவிந்துவிடும் கடனால், வட்டிகூட கட்ட முடியாமல் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்களும் உண்டு.
குறிப்பாக, கடன் வாங்கியவர்கள் இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாது. அது பற்றிய சிந்தனையே வாட்டி வதைக்கும். நமக்கு விடிவு காலமே பிறக்காதா? என்று புலம்புவார்கள். அவர்ளுக்கு எல்லாம் அருமருந்தாகவும், வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது திருச்சேறை திருக்கோவில். அதுவும் இந்த கோவில் தமிழகத்திலேயே உள்ளது. இக்கோவில், கும்பகோணத்திலிருந்து திருவாரூர் சாலையில் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
தேவராப் பாடல் பெற்ற இக்கோவில், காவிரி ஆற்றின் 127-வது திருத்தலமாகப் போற்றப்படுகிறது. இங்கு மூலவராக அருள்மிகு சாரபரமேஸ்வரரும், ஸ்ரீஞானம்பிகையாக தாயாக அம்பாளும் பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்து வருகின்றனர். குறிப்பாக, கடன் பிரச்சனையைத் தீர்க்கும் கடவுளாக, ருணவிமோசன லிங்கேஸ்வரர் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
சோமவாரம் என்று அழைக்கப்படும் திங்கட்கிழமை அன்று திருச்சேறை திருத்தலத்தில், காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது. ஞான தீர்த்தத்தில் நீராடி ஈசனையும் அம்பாளையும் வணங்கிவிட்டு, ஸ்ரீருண விமோசன லிங்கேஸ்வரர் சன்னிதியில் ஈசனுக்கு 11 திங்கட்கிழமை தொடர்ந்து அர்ச்சனை செய்தும், 11 நெய் தீபம் ஏற்றியும் வழிபட்டால், எப்பேர்பட்ட கடனும் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம்.
குறிப்பாக, அருள்மிகு ருணவிமோசன லிங்கேஸ்வரரை வழிபாடு செய்தபின்னர், கஜலட்சுமியைத் தரிசிக்க வேண்டும். கஜலட்சுமி சன்னதி எதிரே சிவதுர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என்று மூன்று துர்க்கைகள் வீற்றிருக்கின்றனர். ஒரே கோவிலில் 3 துர்க்கை சன்னதிகள் அமைந்துள்ளது வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பாகும்.
எனவே, பக்தர்கள் திருச்சேறை திருக்கோவிலுக்குச் சென்று மனம் உருகி இறைவனைப் பிரார்த்தனை செய்தால், கடன் பறந்தோடும். கவலையை விடுங்க, திருச்சேறை புறப்படுங்க.