தூய்மை இயக்கத்தை முன்னிட்டு, டெல்லியில் பிரபல மல்யுத்த வீரர் அங்கித் பையன் பூரியாவுடன் இணைந்து பிரதமர் மோடி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்டோபர் 1-ம் தேதி நாட்டு மக்கள் அனைவரும் தூய்மை இயக்கத்தில் பங்கேற்குமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து, இன்று நாடு முழுவதும் தூய்மைப் பணி நடைபெற்றது. இதில், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் பங்கேற்றனர்.
அந்த வகையில், டெல்லியில் பாரதப் பிரதமர் மோடி, பிரபல மல்யுத்த வீரர் அங்கித் பையன் பூரியாவுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார். இந்த அங்கித் பையன் பூரியா யாரென்றால், 75 நாள் சவால் என்கிற பெயரில், ஒரு நிகழ்ச்சியைத் தொடங்கி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் பதிவிட்டு வந்தார். இதன் மூலம் அவருக்கு 49 லட்சம் பின்தொடர்வாளர்கள் கிடைத்தார்கள். கடந்த ஜூன் 28-ம் தேதி தொடங்கிய இந்த சவாலை, கடந்த செப்டம்பர் 11-ம் தேதி நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சமூக வலைத்தளத்தில் பிரபலமானார்.
இந்த நிலையில், அங்கித் பையன் பூரியாவுடன் தூய்மைப் பணியைத் தொடங்கிய பிரதமர் மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “தூய்மையே சேவை இயக்கத்தில் தேசம் கவனம் செலுத்துகையில், அங்கித் பையன் பூரியாவும் நானும் அப்பணியில் ஈடுபட்டோம். தூய்மைக்கு அப்பால், உடற்தகுதி மற்றும் நல்வாழ்வு குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்” என்று கூறியிருக்கிறார்.
மேலும், அப்பதிவில் காணொளி ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டிருக்கிறார். 4 நிமிடம் 41 வினாடிகள் ஓடும் அந்தக் காணொளி, “இன்று நான் உங்களிடம் இருந்து ஏதாவது கற்றுக்கொள்கிறேன்” என்று அங்கித் பையன் பூரியிடம், பிரதமர் மோடி கூறுவதுடன் தொடங்குகிறது. தொடர்ந்து, “ஸ்வச்சதா அபியான் எவ்வாறு உடற்தகுதிக்கு உதவும்” என்று பிரதமர் மோடி கேட்கிறார். அதற்கு, “சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது நமது கடமை. சுற்றுச்சூழல் ஆரோக்கியமாக இருந்தால் நாமும் ஆரோக்கியமாக இருப்போம்” என்று அங்கித் பதிலளிக்கிறார்.
பிறகு, “சோனிபட்டில் உள்ள தனது கிராமத்தில் தூய்மை குறித்த விழிப்புணர்வு எப்படி இருந்தது” என்று பிரதமர் கேட்க, “மக்கள் தற்போது தூய்மை குறித்து அதிக விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள்” என்று பதிலளித்தார். தொடர்ந்து, “உடல் செயல்பாடுகளுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கிறீர்கள்” என்று கேட்ட, “4 முதல் 5 மணி நேரம் வரை செய்வேன்” என்று கூறிய அங்கித், “நீங்கள் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்துத்தான் எனக்கும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது” என்கிறார்.
அதற்கு பிரதமர் மோடி, “நான் அதிக உடற்பயிற்சி செய்வதில்லை. எனது அன்றாடச் செயல்பாடுகளைச் செய்யத் தேவையான போதுமான உடற்பயிற்சிகளை மட்டுமே செய்கிறேன். அதேசமயம், நான் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கிறேன். எனது வாழ்க்கையில் ஒழுக்கம் இல்லாத இரண்டு விஷயங்கள் மட்டுமே இருக்கின்றன. ஒன்று, உணவு உண்ணும் நேரம். இரண்டாவது, தூக்கம். நான் தூக்கத்திற்கு அதிக நேரம் கொடுக்க வேண்டும். ஆனால் அது என்னால் முடியவில்லை” என்கிறார்.
இதைத் தொடர்ந்து, அங்கித் கூறுகையில், “சமூக வலைதளங்களில் பல இளைஞர்கள் தங்களது செயல்பாடுகளைப் பின்தொடர்வதை கவனித்தேன். விளையாட்டை ஊக்குவிப்பதற்காகவும், விளையாட்டு வீரர்களுடன் நிற்பதற்காகவும் உங்களை பாராட்டுகிறேன். நான் முன்பு ஒரு விளையாட்டு வீரனாக இருந்தேன். ஆனால், காயங்கள் காரணமாக தற்போது விளையாட்டிலிருந்து விலகி இருக்கிறேன். விளையாட்டு வீரர்கள் பதக்கம் வெல்லும்போது நீங்கள் தனிப்பட்ட முறையில் அவர்களை அழைத்து பாராட்டுவதை நான் பார்த்தேன். ஃபிட் இந்தியா மற்றும் கேலோ இந்தியா முன்முயற்சிகள் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கின்றன” என்கிறார்.
நிறைவாக, பிரதமர் மோடி அங்கித்திடம் 75 நாள் சவால் என்ன என்று கேட்கிறார். அதற்கு, “நான் 5 விதிகளைப் பின்பற்றுகிறேன். முதலில், உட்புறம் மற்றும் வெளிப்புறம் என ஒரு நாளைக்கு இரண்டு முறை உடற்பயிற்சி செய்கிறேன். அடுத்ததாக, நான் நாள்தோறும் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கிறேன். மூன்றாவதாக, ஒரு புத்தகத்தில் 10 பக்கங்களை படிக்கிறேன். முதலில், நான் ஸ்ரீமத் பகவத் படித்தேன். இப்போது நான் சிவபுராணம் படித்து வருகிறேன். நான்காவதாக, நான் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கிறேன். நிறைவாக, என்னுள் இருக்கும் முன்னேற்றத்தை ஆவணப்படுத்த ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறி, பிரதமர் மோடியுடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்.
Today, as the nation focuses on Swachhata, Ankit Baiyanpuriya and I did the same! Beyond just cleanliness, we blended fitness and well-being also into the mix. It is all about that Swachh and Swasth Bharat vibe! @baiyanpuria pic.twitter.com/gwn1SgdR2C
— Narendra Modi (@narendramodi) October 1, 2023