பாகிஸ்தானியர்கள் சவூதி அரேபியாவுக்குப் புனிதப் பயணம் செல்வதாகக் கூறி, பிச்சை எடுக்கச் செல்வது சமீபக் காலமாக அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, விலைவாசி உயர்ந்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, அந்நாட்டில் இருந்து பலா் பிச்சை எடுத்துப் பிழைப்பதற்காக, சவூதி அரேபியாவை நோக்கி செல்வது வழக்கமாகி உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் முல்தான் நகர விமான நிலையத்தில் இருந்து யாசகம் எடுப்பதற்காக சிலர் சவூதி அரேபியா செல்ல முயன்றனர். புனித யாத்திரைக்குச் செல்வது போல் மாறுவேடமிட்டு இருந்த, 11 பெண்கள், 4 ஆண்கள், ஒரு சிறுவன் உட்பட 16 பேரை மத்திய புலனாய்வு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், புனிதப் பயணம் செல்வதற்கான அனுமதியைப் பயன்படுத்தி சவூதி அரேபியா சென்று பிச்சை எடுப்பதை அவா்கள் ஒரு தொழிலாக செய்து வருவதும், விசா அனுமதி காலம் வரை அங்கு தங்கி பிச்சை எடுப்பதும், அதில் வரும் வருமானத்தில் பாதியை சவூதி அரேபியாவுக்கு அனுப்பும் இடைத்தரகர்களுக்கு அளித்து வருவதும் தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 90 சதவீதம் பிச்சைக்காரர்கள் பாகிஸ்தானைப் பூர்வவீகமாகக் கொண்டவர்கள் என்றும், இதனால் சிறைகளில் நெரிசல் அதிகமாக இருப்பதாகவும் ஈராக் மற்றும் சவூதி தூதர்கள் தெரிவித்துள்ளனர்.