தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்துவதற்காக 1 லட்சம் இஸ்லாமிய இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்வது என்கிற செயல்திட்டத்தை வகுத்திருந்தோம் என்று கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவர் இத்ரீஸ், என்.ஐ.ஏ.விடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி தீபாவளிக்கு முதல் நாள், கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே, கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இச்சம்பவத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி ஜமேஷா முபின், நிகழ்விடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து முதலில் கோவை காவல்துறையின் விசாரித்து வந்த நிலையில், பின்னர் இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.
இதையடுத்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து, ஜமேஷா முபின் கூட்டாளிகள் 12 பேரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்திருக்கின்றனர். இவர்களில், கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது இத்ரீஸ், முகமது அசாருதீன் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணையில்தான் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விசாரணையின்போது, இத்ரீஸ் அளித்த வாக்குமூலத்தில், “வெடிகுண்டு தயாரிக்க ஜமேஷா முபின் எங்களுக்கு பயிற்சி அளித்தார். கோவை குனியமுத்தாரில் உள்ள அரபிக் கல்லுாரியை எங்கள் தீவிரவாத பயிற்சி வகுப்புக்கு பயன்படுத்திக் கொண்டோம். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ரகசியக் கூட்டம் நடத்துவோம். அங்குதான் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட ஆயுத பயிற்சிகள் எடுத்தோம்.
மேலும், சமூக வலைதளம் வாயிலாக இந்து மதம் மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிரான கருத்துகளுடன் இருக்கும் இஸ்லாமிய இளைஞர்களுக்கு வலை விரித்தோம். அவர்களிடம் இனம் புரியாத வேகம் இருக்கும். அதை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். ஓராண்டில் 1 லட்சம் இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்ய வேண்டும் என்ற இலக்குடன் பணிபுரிந்து வந்தோம். ஆனால், கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் மீது ஜமேஷா முபின் நடத்திய தாக்குதல் தோல்வியில் முடிந்து விட்டது. இது வெற்றி பெற்றிருந்தால் அடுத்தடுத்த தாக்குதலுக்கு தயாராகி இருப்போம்” என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.