முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அரசு, ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தி இருக்கும் நிலையில், “இண்டி” கூட்டணி ஜாதி ரீதியாக சமூகத்தை பிளவுபடுத்துகிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி இருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால். இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்திற்குச் சென்றிருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளில் 78 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் பா.ஜ.க. அறிவித்து விட்டது. மீதியுள்ள வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் டெல்லியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த பா.ஜ.க. மத்தியத் தேர்தல் குழுக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே, இப்பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகருக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 19,260 கோடி ரூபாய்க்கான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதை “இரட்டை எஞ்சின்” என்று எதிர்கட்சியினர் கிண்டல் செய்கின்றனர். “இரட்டை எஞ்சின்” இருப்பது நல்லதுதான். ஏனெனில், இதன் மூலம் மாநிலம் இரட்டை வளர்ச்சியைக் காண முடியும்.
பா.ஜ.க. ஆட்சியில் பல்வேறு துறைகளில் நாடு முன்னேறி வருவதை எதிர்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. “இண்டி” கூட்டணியிடம் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டமோ அல்லது வளர்ச்சி குறித்த தொலைநோக்குப் பார்வையோ கிடையாது. உலகளவில் இந்தியா பாராட்டப்படுவதை எதிர்கட்சிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதிர்கட்சிகளுக்கு தங்கள் நாற்காலியைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை.
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கொலை மற்றும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. பின்தங்கிய நிலையில் இருந்த மத்தியப் பிரதேச மாநிலம் இன்று வளர்ச்சிப் பட்டியலில் 10-ம் இடத்தில் இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான ஆண்டுகள். மத்தியப் பிரதேசத்தை நாட்டின் முதன்மையான முதல் 3 மாநிலங்களில் ஒன்றாக நாம் மாற்ற வேண்டும். அதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டும் மிகவும் முக்கியமானது.
அன்று உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா இன்று 5-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. இந்த வளர்ச்சியை எதிர்க்கும் எதிர்கட்சிகள் இது நடக்கவில்லை என்பதை நிரூபிக்க விரும்புகிறார்கள். எனினும், அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் முதல் 3 பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். மக்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கும் நிலையில், “இண்டி” கூட்டணியினர் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்துகிறார்கள்.
இதன் மூலம் ஜாதி ரீதியாக சமூகத்தைப் பிளவுபடுத்த நினைக்கிறார்கள். நாட்டு மக்கள் வளர்ச்சியை எதிர்த்தவர்களுக்கு 60 ஆண்டுகள் கொடுத்திருக்கிறார்கள். 60 ஆண்டுகள் என்பது குறைவான காலம் அல்ல. 9 ஆண்டுகளில் நாட்டில் இவ்வளவு வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படுத்த முடியுமானால், 60 ஆண்டுகளில் நிறைய செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் அதை செய்யவில்லை. இது அவர்களது தோல்வியைக் காட்டுகிறது” என்று கூறியிருக்கிறார்.