மகாராஷ்டிரா மாநிலம் சங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 பச்சிளம் குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு மருந்து மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறைதான் காரணம் என்று கூறப்படும் நிலையில், மருத்துவமனை டீன் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் சங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி முதல் 1-ம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தைகள் 12 பேரு உட்பட 24 நோயாளிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. மருத்துவமனையில் நிலவிவரும் மருந்து பற்றாக்குறைதான் உயிரிழப்புக்குக் காரணம் என்று குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், 500 நோயாளிகள் அனுமதிக்கப்பட வேண்டிய மருத்துவமனையில் 1,200 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டின.
இந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்த மருத்துவமனை டீன் ஷ்யாம் ராவ் வகோட் கூறுகையில், “மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆண் குழந்தைகளும் 6 பெண் குழந்தைகளும் இறந்திருக்கின்றன. இக்குழந்தைகள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். இதுதவிர, 70 முதல் 80 வயது முதியவர்கள் 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இவர்கள், நீரிழிவு நோய், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு போன்ற காரணங்களால் உயிரிழந்தார்கள். இவர்களது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதே முக்கியக் காரணமாகும். மேலும், 4 நோயாளிகள் பாம்புக் கடியால் உயிரிழந்தவர்கள்.
மேலும், இம்மருத்துவமனையில் இருந்து பல ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டதால், சில சிரமங்களை சந்தித்தோம். அதேபோல, நாங்கள் ஹாப்கின் இன்ஸ்டிடியூட்டில் இருந்து மருந்து வாங்கத் திட்டமிட்டோம். ஆனால், அதுவும் முடியாமல் போய்விட்டது. எனவே, உள்ளூரில் மருந்து வாங்கி பயன்படுத்துகிறோம். அதோடு, 80 கிலோ மீட்டர் சுற்றளவில் இது போன்ற மருத்துவமனை இது ஒன்றுதான் இருக்கிறது. எனவே, நோயாளிகள் அதிக அளவில் வருகின்றனர். ஆகவே, நோயாளிகள் இறப்புக்கு மருந்து பற்றாக்குறை மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை என்று கூறுவதை ஏற்க முடியாது” என்று தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா மாநில மருத்துவத்துறை அமைச்சர் ஹசன் முஸ்ரீஃப், “6 குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 24 மணி நேரத்தில் உயிரிழந்திருக்கின்றன. அதேபோல, உயிரிழந்த 7 நோயாளிகள் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 2 பேர் பாம்பு கடித்து இறந்து விட்டனர். மருத்துவமனையில் போதிய ஊழியர்கள் இருக்கின்றனர். எனினும், இந்த விவகாரம் தொடர்பாக விரைந்து விசாரணை நடத்துமாறு சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. மருத்துகள் இருப்பு குறித்தும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது” என்றார்.
இதனிடையே, மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, இச்சம்பவம் துரதிருஷ்டவசமானது என்று கூறியிருப்பதோடு, இதுகுறித்த அறிக்கை கோரப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.