பெண்ணாடத்தில் இருந்து புதுவை நோக்கிச் சென்ற லாரி தீடீரென்று தீப்பிடித்து எரிந்ததால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திலிருந்து புதுச்சேரிக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. இதனை பிரபாகரன் என்பவர் ஓட்டி சென்றார்.
இந்த லாரி பெரியக்காட்டு பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, லாரியின் பின் பகுதியில் இருந்து புகை வருவதைக் கண்ட பிரபாகரன், லாரியைச் சாலையிலேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.
தொடர்ந்து, டீசல் டேங்க் அருகே தீ பற்றி லாரி முழுமையாக எரியத் தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும், சாலையின் அருகில் மின் ஒயர் இருந்ததால் உடனடியாக மின்சாரத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில், லாரி முழுமையாக எரிந்து சேதமானது. மேலும், லாரியில் இருந்த சிமெண்ட் மூட்டைகளும் தீ விபத்தில் எரிந்து நாசமானது. இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால், சென்னை-நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.