காலிஸ்தான் தீவிரவாதி கொலை விவகாரம் தொடர்பாக, இந்தியாவுக்கும் கனடாவுக்குமான மோதல் முற்றி இருக்கும் நிலையில், இந்தியாவில் இருக்கும் அனைத்து தூதரக அதிகாரிகளையும் அக்டோபர் 10-ம் தேதிக்குள் திரும்பப்பெற வேண்டும் என்று இந்தியா உத்தரவிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலையில் இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாக, காலிஸ்தான் தீவிரவாதிகள் கூறிவந்தனர். இந்த சூழலில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், இதே குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்கு இந்தியா மறுப்பும், கண்டனமும் தெரிவித்த நிலையிலும்கூட, அந்நாட்டுக்கான இந்தியத் தூதரை வெளியேறுமாறு ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டார். இதற்கு எதிர்வினையாக, இந்தியாவில் உள்ள கனடா நாட்டு உயர் தூதரக அதிகாரியை வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டது. அதோடு, கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிரது. இதனால் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான், அக்டோபர் 10-ம் தேதிக்குள் இந்தியாவில் இருக்கும் அனைத்து கனடா தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். இதன் பிறகு இந்தியாவில் இருக்கும் அவர்களது தூதரகப் பொறுப்புகள் நீக்கப்படும் என்று இந்தியா கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும், இக்கருத்து கூறித்து இந்தியா மற்றும் கனடா வெளியுறவுத்துறை அதிகாரிகள் உடனடியாக பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.