விஹெச்பி மற்றும் பஜ்ரங்தளம் அமைப்பு சார்பில் நாடு முழுவதும் சௌர்ய ஜாக்ரன் யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரை செப்டம்பர் 30-ம் தேதி முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது.
மேற்கு வங்கத்தில், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, இந்த யாத்திரை ஒரு சில மாவட்டங்களில் செல்ல காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதனால், விஹெச்பி மற்றும் பஜ்ரங்தளம் அமைப்பைச் சேர்ந்த சந்தன் கைட்டி, அமித் பிரமானிக், தேப்ஜித்பார் ஆகிய 3 பேர் தனித்தனியாகக் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், யாத்திரை அமைதியாகவும், உரியக் கட்டுப்பாடுகளுடன், சட்டத்திற்கு உட்பட்டும் நடைபெறும் எனத் தெரிவித்தனர்.
இந்த யாத்திரை இந்து மத்தின் மகிமைகளையும், அதன் புனிதத் தன்மைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்ல உள்ளது. இது ஒரு விழிப்புணர்வு யாத்திரை ஆகும்.
இந்த யாத்திரை மூலம் இந்திய மக்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றையும், இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூறவும், அவர்களைக் கௌரவப்படுத்தவும் இந்த யாத்திரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த யாத்திரையில் அதிகபட்சம் 200 பேர் வரையிலும், 3 வாகனங்கள் மற்றும் 20 இரண்டு சக்கர வாகனங்களில் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி சென் குப்தா, யாத்திரைக்கு அனுமதி வழங்கினார். இந்த யாத்திரை அக்டோபர் 4-ம் தேதியான இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறுகிறது.
இதனிடையே, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் 60 -ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில், இரண்டு பொதுக்கூட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடப்பதாக இருந்த பொதுக் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இதனைக் கண்டித்து போராட்டம் நடத்திய மாநில அமைப்பு செயலாளர் சேதுராமன் ஜி, மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.