வள்ளலார் இன்று உயிருடன் இருந்திருந்தால், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை பாராட்டியிருப்பார் என்று நம்புவதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். மேலும், இளைஞர்கள் தமிழ், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்திலும் புலமை பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் வள்ளலாரின் சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், காணொளிக் காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, “வள்ளலார் காலத்திற்கும் முன்னதாகவே சிந்தித்தவர். கடவுளைப் பற்றிய வள்ளலாரின் பார்வை மதங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவை.
இந்த உலகத்தின் ஒவ்வொரு அணுவிலும் கடவுளின் அம்சத்தை கண்டவர். தெய்வீகப் பிணைப்பை மனிதர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். வள்ளலார் உயிருடன் இருந்தால் இன்று நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை பாராட்டியிருப்பார் என்று நம்புகிறேன். மேலும், இளைஞர்கள் தமிழ், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற வேண்டும் என்று வள்ளலார் விரும்பினார்.
வள்ளலாரின் வார்த்தைகள், வாசிக்கவும், புரிந்து கொள்ளவும் எளிமையானவை. இதனால்தான், சிக்கலான ஆன்மிக ஞானக்கருத்துகளை எளிய வார்த்தைகளில் வெளிப்படுத்த முடிகிறது. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற நமது ஒட்டு மொத்த சிந்தனைக்கு வலுசேர்க்க காலமும் இடமும் கடந்த நமது கலாசார பன்முகத்தன்மைக்கு பொது இழையாக திகழ்கின்ற பெரும் ஞானிகளின் போதனைகள் பெரிதும் உதவுகின்றன.
அன்பு, இரக்கம், நீதி ஆகியவற்றை வலியுறுத்தும் அவரது போதனைகளை நாம் பரப்புவோம். வள்ளலாரின் இதயப்பூர்வமான சிந்தனைகள் தொடர்பாக நாம் கடினமாக உழைப்போம். ஒருவரும் பட்டினியுடனும் இல்லாதிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வோம். ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி வழங்குவோம்” என்று கூறியிருக்கிறார்.