புதிய மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியையும் குற்றவாளியாக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருக்கிறது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இந்த சூழலில், கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மதுபானக் கொள்கையில் திருத்தம் செய்து, புதிய மதுபானக் கொள்கை வெளியிடப்பட்டது. இந்த புதிய கொள்கை தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்தது. இதன் மூலம், ஆம் ஆத்மி அரசு பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டார். இதையடுத்து, புதிய மதுபானக் கொள்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் சி.பி.ஐ., டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. தொடர்ந்து, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, சஞ்சய் சிங் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து, மணீஷ் சிசோடியா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.பட்டி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூவிடம், இந்த வழக்கில் ஒரு அரசியல் கட்சி ( ஆம் ஆத்மி) பலனடைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அக்கட்சி இன்னும் குற்றவாளியாக்கப்படவில்லை. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவு காரணமாக, அமைச்சரவை குறிப்புகளை ஆய்வு செய்யத் தடை ஏற்பட்டுள்ளது. இது யூனியன் பிரதேசமான டெல்லிக்குப் பொருந்துமா என்பது எங்களுக்குத் தெரியாது என்றனர். இதைத் தொடர்ந்து, மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் ஆம் ஆத்மியையும் குற்றவாளியாக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருக்கிறது. இத்தகவலை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க அமலாக்கத்துறை தயாராகி வருகிறது.