உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ள, 17 இலட்சம் ஆப்கானிஸ்தானியர்களை வெளியேற பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றதிலிருந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆப்கானிஸ்தானிலிருந்து ஏராளமான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். அவர்கள் அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் அனுமதியில்லாமல் தங்கியுள்ள, 17 இலட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகளை வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அதிகரித்து வரும் தீவிரவாதத் தாக்குதலுக்கு, அந்த நாட்டிலிருந்து வந்தவர்கள் தான் காரணம் என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. தற்போது, ஆப்கானிஸ்தான் அகதிகளைப் பாகிஸ்தானிலிருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் உரிய ஆவணங்களின்றி 17 இலட்சம் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர்கள் அனைவரையும் வெளியேற்றும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.
பாகிஸ்தானின் இந்த செயலுக்கு, தாலிபான்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த முடிவை பாகிஸ்தான் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தாலிபான்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த வாரம் மஸ்தூங் நகரில் நடந்த மத நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், 52 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தும் தீவிரவாதிகளுக்கு, தாலிபான்கள் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.