பீகாரில் உள்ள மெகா கூட்டணி ஊழலில் நிரம்பி இருக்கிறது. மேலும், சமரச அரசியலில் தீவிரமாக இருக்கிறார்கள் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா குற்றமசாட்டி இருக்கிறார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் பா.ஜ.க. தலைவர் கைலாசபதி மிஸ்ராவின் 100-வது பிறந்தநாள் விழாவையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, “இங்குள்ள (பீகார்) அரசானது ஊழலால் நிரம்பி இருக்கிறது. மேலும், அவர்கள் சமரச அரசியலில் மும்முரமாக இருக்கிறார்கள். இது போன்ற அரசாங்கங்களுக்கு குட்பை சொல்ல வேண்டிய நேரம் இது. அதேபோல, பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கான நேரம் இது.
ஏற்கெனவே, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதை யாருமே கவனிக்கவில்லை. ஆனால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றே நாட்களில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி விட்டார். இந்த மசோதா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலைப் பெற்றதையடுத்து, தற்போது சட்டமாக மாறியுள்ளது.
கைலாசபதி மிஸ்ரா சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் முன்னோக்கிக் கொண்டு வர உழைத்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றின் மூலம் உத்வேகம் பெற்று, பீகாரில் மட்டுமல்லாது நாடு முழுவதும் கட்சியை புதிய சக்தியுடன் கொண்டு செல்வோம்” என்றார்.