இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 1,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே இருக்கும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நகரம் காஸா. இந்நகரத்தின் காஸா முனைப் பகுதி ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மேலும், இங்கு பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்த தீவிரவாதிகளும் ஒருங்கிணைந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அடிக்கடி தாக்குதல் நடத்துவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று அதிகாலை திடீரென காஸா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தினர். ஒரே நேரத்தில் 5,000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் தாக்கியதில் இஸ்ரேல் திக்குமுக்காடிப் போனது. மேலும், இஸ்ரேல் சுதாரிப்பதற்குள், காஸா தீவிரவாதிகள் அந்நாட்டுக்குள் ஊடுருவி, கண்ணில் பட்ட மக்களை எல்லாம் சுட்டுத் தள்ளினர். இக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது.
காஸா தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த குழந்தைகள், முதியோர், பெண்கள் என 300-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 1,500-க்கம் மேற்பட்டோர் படுகாயமடைந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், இத்தாக்குதலில், இஸ்ரேல் நாட்டின் மேயர் ஒருவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஏராளமான இராணுவ வீரர்களை சிறைப்பிடித்துச் சென்றிருக்கிறார்கள். அதேபோல, அப்பாவிப் பொதுமக்கள் பலரையும் காஸா தீவிரவாதிகள் பணையக் கைதிகளாக சிறைப்பிடித்து வைத்திருக்கிறார்கள். மேலும், இத்தாக்குதலை அல் அக்ஸா புயல் என்று ஹமாஸ் தீவிரவாதப் படையின் தளபதி முகமது அல்டைஃப் கூறியிருக்கிறார்.