கடல் ஆராய்ச்சி தொடர்பாக சீன உளவுக் கப்பல் இம்மாதம் இலங்கைக்கு வரவிருந்த நிலையில், ஆராய்ச்சி ஒப்பந்தத்தில் பல்கலைகழகம் திடீரென விலகி இருக்கிறது. இதையடுத்து, சீன உளவுக் கப்பல் இலங்கை வருகைக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அண்டை நாடான சீனா, மிகப்பெரிய கப்பல் படையை வைத்திருக்கிறது. அதேபோல, விண்வெளி, சைபர், மின்னணுப் படைப் பிரிவு சார்பில் பல்வேறு பெயர்களில் உளவுக் கப்பல்களையும் வைத்திருக்கிறது.
இக்கப்பல்களை அவ்வப்போது இலங்கைக்கு அனுப்பி இந்தியாவை உளவு பார்த்து வருகிறது. அந்தவகையில், ஷின் யான் 1, 3, 6, ஷியாங் யாங் ஹாங் 1, 3, 6, 18, 19, யுவான் வாங் 5 ஆகிய உளவு மற்றும் போர்க் கப்பல்கள் கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு வருகை தந்து வருகின்றன.
அதேபோல, கடந்த ஆகஸ்டு மாதம் ஷை யாங் 24 ஹவோ என்ற சீன போர்க் கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு துறைமுகத்தில் 2 நாட்கள் நங்கூரமிட்டு நிறுத்த இலங்கை அரசு அனுமதி வழங்கியது. இதற்கு, இந்தியா கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்தது. ஆனால், இலங்கையிலுள்ள ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனா 99 ஆண்டு குத்தகைக்கு எடுத்திருப்பதால், அந்நாட்டால் எதுவும் செய்ய முடியவில்லை.
இந்த நிலையில், சீனாவின் மற்றொரு கப்பலான ஷின் யான்-6 இலங்கைக்கு வரவிருப்பதாகவும், இக்கப்பல் 17 நாட்கள் ஹம்பந்தோடா துறைமுகத்தில் முகாமிட்டு, இலங்கை ருஹுனு பல்கலைகழக நீரியியல் துறையுடன் இணைந்து இலங்கை கடற்பரப்பில் கடல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கும் இந்தியா கண்டனம் தெரிவித்ததோடு, சீனக் கப்பல் வருகைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி இருந்தது.
காரணம், சீனாவின் உளவு மற்றும் போர்க் கப்பல்களால் 750 கி.மீ. தூரம் வரையிலான இடங்களைக் கண்காணிக்க முடியும். அந்த வகையில், இலங்கைக்கு மிகவும் அருகிலுள்ள இந்தியாவின் ஸ்ரீஹரி கோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்களை இக்கப்பல் மூலம் உளவு பார்க்க வாய்ப்பிருக்கிறது.
எனவேதான், சீனக் கப்பல்களின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதையடுத்து, கடந்த மாதம் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி, இலங்கை கப்பல் வருகைக்கு அனுமதி வழங்கவில்லை. இந்தியாவின் கவலைகள் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறியிருந்தார். ஆனால், சீனக் கப்பல் இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்தில் இருந்து சுமார் 474 கடல் மைல் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான், சீன ஆராய்ச்சிக் கப்பலுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளவிருந்த ருஹுனு பல்கலைக்கழக பேராசிரியர்களில் ஒருவர் வெளிநாட்டுக்குச் சென்று விட்டார். மற்றொரு பேராசிரியர் ராஜினாமா செய்து விட்டார். எனவே, ஆய்வுக்கான ஒப்பந்தத்தில் இருந்து ருஹுனு பல்கலைக்கழகம் விலகி இருக்கிறது. இதன் காரணமாக, சீன உளவுக் கப்பல் இலங்கை வருகையில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மேலும், சீனக் கப்பல் வருகைக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கவில்லை என்றும் இலங்கை அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.