சூடானில் நடந்து வரும் 6 மாதப் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,000-ஐ தாண்டியிருக்கும் நிலையில், கார்ட்டூமுக்கு தெற்கே ஜபல் அவ்லியா மீது துணை இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். சிறிய நகரத்தில் பொதுமக்களின் வீடுகளுக்குள் குண்டுகள் விழுந்தன என்று உள்ளூர் எதிர்ப்புக் குழு தெரிவித்திருக்கிறது.
சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு இராணுவமும், துணை இராணுவப் படையின் அதிவிரைவுப் படையினரும் இணைந்து இராணுவப் புரட்சியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் அப்துல்லா ஹாம்டொக் சிறைப்பிடிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதன் பிறகு, அங்கு இராணுவ ஆட்சி நடந்து வந்த நிலையில், மீண்டும் ஜனநாயக ஆட்சியைக் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இது தொடர்பாக, இராணுவத் தளபதி அப்தெல் ஃபத்தா அல் புர்ஹானுக்கும், துணை இராணுவத்தின் அதிவிரைவுப் படைத் தளபதி முகமது ஹம்தான் டாக்லோவுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இரு தரப்பினருக்கும் இடையே போர் மூண்டது. கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் இப்போரில் இதுவரை 9,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். ஆனாலும், போர் முடிவுக்கு வந்தபாடில்லை.
இப்போர் பெரும்பாலும் கார்ட்டூம் மற்றும் டார்ஃபரின் மேற்குப் பகுதியில்தான் நடந்து வருகிறது. இதன் காரணமாக, சூடானுக்குள் சுமார் 4.3 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். மேலும், சுமார் 1.2 லட்சம் மக்கள் எல்லைகளைத் தாண்டி வெளியேறி விட்டனர். சமீபத்திய வாரங்களில் இப்போர் தெற்கே நகர்ந்திருக்கிறது. இதனால், தலைநகருக்குத் தெற்கே உள்ள அல் ஜசிரா மாநிலத்தில் தஞ்சம் புகுந்த 3.66 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த சூழலில், ஜபல் அவ்லியா மீது துணை இராணுவத்தின் அதிவிரைவுப் படையினர் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நகரத்திற்கு தெற்கே 50 கி.மீ. (31 மைல்) தொலைவில் உள்ள சிறிய நகரத்தில் இக்குண்டுகள் வீடுகளுக்குள் விழுந்ததாக உள்ளூர் எதிர்ப்புக் குழு தெரிவித்திருக்கிறது. போர் தொடங்கியதில் இருந்து இக்குழுவினர்தான் பொதுமக்களை பாதுகாத்து வருகின்றனர்.