இஸ்ரேல் மீதான காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கத்தார் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
“அல் அஸ்கா புயல்” என்கிற பெயரில் இஸ்ரேல் நாட்டின் மீது காஸா தன்னாட்சி நகரத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று காலை திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். வெறும் 30 நிமிடங்களில் 7,000 ஏவுகணைகளை ஏவியதால், இஸ்ரேல் திக்குமுக்காடிப் போனது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இஸ்ரேல் நாட்டுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டனர். இதில், ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், ஏராளமான இஸ்ரேல் இராணுவத்தினரையும், அப்பாவி பொதுமக்களையும் ஹமாஸ் தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
இந்த நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகளின் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு இஸ்லாமிய நாடுகள் பலவும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. குறிப்பாக, காஸாவிலுள்ள ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகள் வழங்கி வரும் ஈரான் நாடு, இஸ்ரேல் மீதான தாக்குதல் பெருமைமிக்க நடவடிக்கை என்று பெருமிதம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து அந்நாட்டின் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மூத்த ஆலோசகர் யஹ்யா ரஹீம் ஸஃபாவி கூறுகையில், “அல் அக்ஸா புயல் தாக்குதலை நாங்கள் ஆதரிக்கிறோம். இது ஒரு பெருமைமிக்க நடவடிக்கை” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, ஈரான் வெளியுறவு அமைச்சகம் இத்தாக்குதலை பாராட்டி இருக்கிறது. இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி, “இன்றைய நடவடிக்கையானது ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான எதிர்ப்பு மற்றும் ஆயுதமேந்திய நடவடிக்கைகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இந்த நடவடிக்கையின்போது அற்புதமான வெற்றிகளை அடைந்திருக்கிறது. மேலும், இது சியோனிஸ்டுகளுக்கு எதிரான பாலஸ்தீனிய மக்களின் போராட்ட வரலாற்றில் ஒரு பிரகாசமான இடமாகும்” என்று தெரிவித்திருக்கிறார்.
இதேபோல, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளும் குரல் கொடுத்திருக்கின்றன. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மத்திய கிழக்கின் நீடித்த அமைதிக்காக, போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக சர்வதேச சமூகம் ஒன்று சேருமாறு கேட்டுக்கொள்கிறோம். பாலஸ்தீன பிரச்சனைக்கு சர்வதேச சட்டத்தில் தொகுக்கப்பட்ட மற்றும் தொடர்புடைய ஐக்கிய நாடுகள் சபை தீர்மானங்களுக்கு இணங்க ஒரு நியாயமான, விரிவான மற்றும் நீடித்த தீர்வு தேவை. 1967-க்கு முந்தைய எல்லைகளின் அடிப்படையில், அல் குத்ஸ் அல்-ஷரீப்பை தலைநகராகக் கொண்டு பாலஸ்தீன அரசு நிறுவப்பட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறது.
மேலும், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஸா பகுதியில் சமீபத்திய நிகழ்வுகளை ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இஸ்ரேலிய சியோனிஸ்டுகள் ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனிய மக்களின் உரிமைகளை மிதித்து அவமதிப்பு செய்ததன் விளைவாக இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கிறது. முஸ்லீம்களின் புனித இடங்கள் அவமரியாதை செய்யப்படுவதற்கான பாலஸ்தீனிய மக்களின் எதிர்ப்பு இது” என்று தெரிவித்திருக்கிறது.
கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அல் அக்ஸா மசூதிக்குள் மீண்டும் ஊடுருவல் நடத்தப்பட்டு, பாலஸ்தீன மக்களின் உரிமைகளை மீறுயதால் ஏற்பட்ட விளைவு இது. இதற்கு இஸ்ரேல் மட்டுமே பொறுப்பு. சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல்களை நிறுத்தவும், பாலஸ்தீனிய மக்களின் வரலாற்று உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும், இந்த நிகழ்வுகளை சாக்குப்போக்காகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் இஸ்ரேலை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகம் அவசரமாக செயல்பட வேண்டியது அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.