மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் உணவுத்துறை அமைச்சர் ரதின் கோஷ் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதாவது, இவர் கடந்த 2014 முதல் 2018 வரையிலான காலக்கட்டத்தில், மத்தியம்கிராம் நகராட்சியின் அலுவலகப் பொறுப்பாளராக பதவி வகித்தார்.
அப்போது, உள்ளாட்சி அமைப்பில் காலியாக இருந்த பணியிடங்களில் 1,500 பேரை சட்டவிரோதமாக பணி அமர்த்தியதாக, ரதின் கோஷ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள இவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், அவருக்குச் சொந்தமான 12 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் மற்றொரு அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி இருக்கிறார்கள். மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் பிர்ஹாத் ஹக்கீம் வீட்டில்தான் இச்சோதனை நடந்திருக்கிறது. இவர், கொல்கத்தா மேயராக இருந்தபோது, உள்ளாட்சி அமைப்புகளில் ஆட்கள் சேர்ப்பு முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக பிர்ஹாத் ஹக்கீம் வீட்டில் இன்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவரது வீடு தெற்கு கொல்கத்தாவில் உள்ள செட்லா பகுதியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வீட்டில் மத்தியப் படைகளின் பாதுகாப்புடன் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், 2 சி.பி.ஐ. அதிகாரிகள் அமைச்சரிடம் விசாரணை நடத்தினர்.
இதேபோல, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. மதன் மித்ரா வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இவர் மீது கமர்ஹாட்டி நகராட்சியில் நடந்த ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது விசாரணையில் உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மேற்குவங்க மாநில அமைச்சர்கள் 2 பேர், எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.