சிவகங்கை மாவட்டம் அதப்படக்கி பகுதியில் 2,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் அதப்படக்கி காரிகண்டனி கண்மாயின் மையப்பகுதியில், காரைக்குடி வரலாற்று ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், அழகப்பா அரசு கல்லூரி உதவி பேராசிரியர் மார்டின் ஜெயப்பிரகாஷ் ஆகியோர், ஆய்வு செய்தனர். இதில், கல்வட்டங்கள், கற்குவியல்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். இது 2,500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள், தங்களை வழி நடத்திச் செல்லும் தலைவர் உயிரிழந்தால், அவரது உடலை அடக்கம் செய்து, அவரது நினைவு அடையாள சின்னமாகத் தரையின் மேற்பரப்பில் பெரிய செம்பூரான் கற்களை நட்டு வைத்தனர்.
இதை, நாளடைவில் கல்வட்டம் என்று அழைத்தனர். அதன் உட்பகுதியில் முதுமக்கள் தாழிகளை வைத்து ஈமச்சடங்கு செய்திருப்பர். இந்த வழக்கம், பெருங்கற்கால நாகரிக வாழ்க்கை முறையாக இருந்துள்ளது. இப்பகுதியில் கல்வட்டங்கள் வட்ட வடிவில், 20-க்கும் மேற்பட்ட கற்குவியல்களைக் கொண்டிருக்கும். மேற்பரப்பில், 3.5 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட கல்வட்டங்களாக அமைத்துள்ளனர் என்று கூறியுள்ளனர்.