10 வது இந்திய-ஸ்வீடன் புதுமைக் கண்டுபிடிப்பு தின கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார்.
புதுதில்லியில் இன்று நடைபெற்ற 10-வது இந்தியா-ஸ்வீடன் புதுமைக் கண்டுபிடிப்பு தின கூட்டத்தில் பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், உலகளாவிய சவால்களைத் திறம்பட எதிர்கொள்ள இந்தியா-ஸ்வீடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றார்.
இரு தரப்பு நிறுவனங்களும் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மனித வளப் பரிமாற்றத்தில் ஈடுபட ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
பசுமைத் தொழில்நுட்பத் துறையில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், இந்த ஆண்டு, ஒன்பது ஸ்வீடன் நிறுவனங்கள் இந்தியா – ஸ்வீடன் புதுமைக் கண்டுபிடிப்பு விரைவுத் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு வருகை தந்தன என்று தெரிவித்தார். இதன் மூலம் இந்தத் துறையில் ஸ்வீடனுக்கும் இந்தியாவுக்கும் இடையே வலுவான உறவுகள் ஏற்படும் என்று குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டில், இரு நாடுகளும் தூதரக உறவுகள் ஏற்பட்ட 75 வது ஆண்டு நிறைவையும், நிலையான எதிர்காலத்திற்கான புதுமைக் கண்டுபிடிப்பு கூட்டுச் செயல்பாடு குறித்த ஸ்வீடன்-இந்தியா கூட்டுப் பிரகடனத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவையும் கொண்டாடுகின்றன என்று குறிப்பிட்டார்.
நவீன நகரங்கள், போக்குவரத்து மற்றும் மின்சார வாகன இயக்கம், எரிசக்தி, தூய்மைத் தொழில்நுட்பங்கள், புதிய பொருட்கள், விண்வெளி, சுழற்சி மற்றும் உயிரியல் அடிப்படையிலான பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல் உள்ளிட்ட பல துறைகளை இந்தக் கூட்டு செயல்பாடு உள்ளடக்கியது என்று கூறினார்.
மேலும் இருதரப்பு ஒத்துழைப்பை, குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் மேம்படுத்தவும், கண்டுபிடிப்பு சூழல் அமைப்பை மேம்படுத்தவும் இந்தியா தயாராக உள்ளது என்று கூறினார்.