சர்வதேச செலவாணி நிதியம்-உலக வங்கி ஆண்டுக் கூட்டங்கள் 2023-ல் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மொராக்கோவின் மராகேச் நகருக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.
மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 10.10.2023 முதல் மொராக்கோவின் மராகேச் நகருக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது, நிர்மலா சீதாராமன் உலக வங்கி குழு (டபிள்யூபிஜி) மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) வருடாந்திர கூட்டங்களில் பங்கேற்கிறார்.
இந்த வருடாந்திர கூட்டங்களில் உலகெங்கிலும் இருந்து நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கியாளர்கள் கலந்து கொள்வார்கள். வழக்கமாக அக்டோபரில் நடைபெறும் வருடாந்திர கூட்டங்கள் வாஷிங்டன் டி.சி.யில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும், மூன்றாவது ஆண்டில் மற்றொரு உறுப்பு நாட்டிலும் நடத்தப்படுவது வழக்கம்.
வருடாந்திர கூட்டங்களுக்கான இந்திய தூதுக்குழுவுக்கு மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் தலைமை தாங்குவார். இதில் நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் இடம்பெற்றிருப்பார்கள்.
நான்காவது ஜி 20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் (எஃப்.எம்.சி.பி.ஜி) கூட்டத்திற்கு நிதியமைச்சர் சீதாராமன் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் தலைமை தாங்குவார்கள்.
நான்காவது ஜி 20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் இரண்டு அமர்வுகளைக் கொண்டிருக்கும்:-
21 -ஆம் நூற்றாண்டின் பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்ள பலதரப்பு அபிவிருத்தி வங்கிகளை (MDB) பலப்படுத்துதல் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் கிரிப்டோ சொத்துக்கள் நிர்வாகம் என்ற இரண்டு அமர்வுகள் அதில் இடம்பெறும்.
‘ஒரே பூமி’, ‘ஒரே குடும்பம்’ மற்றும் ‘ஒரே எதிர்காலம்’ என்ற இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவ கருப்பொருளின் கீழ், 2023 செப்டம்பரில் புதுதில்லியில் நடைபெற்ற உச்சிமாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்ட நிதி வழிமுறைகளின் கீழ் அடையப்பட்ட முக்கிய விளைவுகள் குறித்து விவாதங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.