முருகனின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாக பழனிமலை போற்றப்படுகிறது. இங்குள்ள முருகன் சிலை 9 வகையான நவபாஷாணங்களைக் கொண்டு போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டதால், மிகவும் சக்தி வாய்ந்தது.
இதனால், தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா என வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் தினசரி வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூடவே, மாலையில் நடைபெறும் தங்கத் தேரோட்டத்தில் கலந்து கொள்வது பக்தர்களுக்கு வழக்கம்.
அதாவது, மாலை 6:30 மணிக்கு சாயரட்சை பூஜை முடிவடைந்தும், சின்ன குமாரர் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுத் தங்கத்தேரில் அமர்த்தப்படுவார். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில், சின்னக் குமார் எழுந்தருளி மலை மீது கம்பீரமாக உலா வருவார். அப்போது, மலைமீது உள்ள பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பியபடி முருகனைத் தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில், பழனி முருகன் கோவிலில் அக்டோபர் 15 -ம் தேதி முதல் 23 -ம் தேதி வரை தங்கரத சுவாமி புறப்பாடு நடைபெறாது என்று திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
காரணம், நவராத்திரி பூஜைகள் நடைபெறுவதை முன்னிட்டு தங்கரத தேர் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பழனி முருகன் திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், அக்டோபர் 24-ம் தேதி முதல் வழக்கம்போல் தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.