புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீட்டை ஊக்குவிக்க இந்தியாவும், சவூதி அரேபியாவும் முடிவு செய்துள்ளன.
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இருநாடுகளுக்கு இடையே முதலீடுகளை ஊக்குவிக்க இந்தியாவும், சவூதி அரேபியாவும் ஒப்புக் கொண்டுள்ளன.
மத்திய மின்சக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங், தமது பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று, சவூதி முதலீட்டு அமைச்சர் காலித் அல்-ஃபாலிஹ் உடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர், சவூதி வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் உரையாற்றிய சிங், சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம், பசுமை ஹைட்ரஜன் போன்ற புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார். சவூதி அரேபியாவில் உள்ள அனைத்து முக்கிய வணிக நிறுவனங்களும் கூட்டத்தில் பங்கேற்றன.
சவூதி அரேபிய வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யக்கூடிய மின்துறை குறித்து இன்வெஸ்ட் இந்தியா ஒரு சுருக்கமான விளக்கக்காட்சிப்படுத்தப்பட்டது. மின் உற்பத்தி திட்டங்கள், எரிசக்தி சேமிப்பு, மின்சாரப் பரிமாற்றம், பசுமை ஹைட்ரஜன் போன்ற துறைகளில் இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இந்த சந்திப்பின் போது எடுத்துரைக்கப்பட்டன.
ஆர்.கே. சிங் தூதுக்குழுவுடன் ரியாதில் உள்ள சுதைர் சூரிய மின்சக்தி நிலையத்தையும் பார்வையிட்டார். இந்த ஆலை சவூதி அரேபியாவின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி ஆலையாகும். மேலும் இந்தப் பணி ஒரு இந்திய நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது.
பயணத்தின் முதல் நாளான அக்டோபர் 08 அன்று, மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க துறை அமைச்சர் ரியாத்தில் நடைபெறும் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவின் பருவநிலை வாரம் 2023-ன் உயர் மட்டற்ற நிலைப் பிரிவில் இந்திய தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவின் பிராந்தியத்தில் எரிசக்தி மாற்றத்தை மேம்படுத்துதல் என்ற உயர் நிலை அமைச்சர்கள் குழுவில் ஆர்.கே.சிங் பங்கேற்றார்.
ஆர்.கே.சிங் மற்றும் சவூதி அரேபிய அரசின் எரிசக்தி அமைச்சர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் அல்-சவுத் ஆகியோருக்கு இடையே மின் இணைப்புகள், பசுமை தூய்மையான ஹைட்ரஜன், விநியோக அமைப்புகள் ஆகிய துறைகளில் இந்தியாவுக்கும், சவூதி அரேபியாவிற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், மின் இணைப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பிற்கான பொதுவான கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.